நிலைத்து நின்ற பட்லர்: இங்கிலாந்துக்கு எளிதில் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையே 20 ஓவர் போட்டிகள் நடந்து வருகின்றன. அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்தன. மூன்றாவது போட்டியும் அதே மைதானத்தில் செவ்வாயன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் ஆடிய இந்தியா விரைவாக விக்கெட்டுகளை இழந்தது. கே.எல்.ராகுல் தொடர்ந்து மூன்றாவது போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 15, இஷான் கிஷான் 4 என்று குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் விராத் கோலி 46 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். இங்கிலாந்தின் மார்க் உட் பந்துவீச்சில் மிரட்டி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை எடுத்தது.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் இந்திய பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டனர். ஜாஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். பேர்ஸ்டோ 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். 1 ஓவர் 4 பந்துகள் மீதமிருக்கையில் இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

More News >>