வாய்க்காலுக்குத் தண்ணீர்: காங்கேயம் விவசாயிகள் அதிரடி முடிவு
விவசாயத்திற்குத் தண்ணீர் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததை கண்டித்து காங்கேயம் தொகுதியில் ஆயிரம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் தாலுகாவில் வெள்ளகோவில் உள்ளது. இங்கு பரம்பிகுளம் - ஆழியாறு கிளை வாய்க்காலில் முறையாக தண்ணீர் விட வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் செய்தனர். ஆனால் பேச்சுவார்த்தைக்குப் பின்பும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே, காங்கேயம் தொகுதியில் விவசாயிகள் ஆயிரம் பேர் வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
1996ம் ஆண்டு இதேபோன்று ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் 1,016 விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தத்தில் 1,033 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால் அங்கு வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசன் வெற்றி பெற்றார்.
தற்போது கொங்கு இளைஞர் பேரவையின் உ.தனியரசு அங்கு எம்.எல்.ஏ ஆக உள்ளார். நடைபெற இருக்கும் தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மு.பெ. சாமிநாதனும் அதிமுக சார்பில் ஏ.எஸ்.ராமலிங்கமும் போட்டியிடுகின்றனர்.