ஸ்லீப்பர் செல் பற்றி இப்போது அதிகம் பேசாதது ஏன்? - டிடிவி தினகரன் விளக்கம்
சிலீப்பர் செல் பற்றியெல்லாம் இப்போது அதிகம் பேசுவது கிடையாதே? என்ற கேள்விக்கு, ‘நான் எப்போதுமே அதுபற்றி அதிகமாக பேசியது கிடையாது. நீங்கள் தான் கேட்டுகொண்டே இருப்பீர்கள்’ என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை சாமியாக சித்தரிக்கும் தியேட்டர் விளம்பரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், அர்த்தராத்திரியில் குடை பிடிப்பது போல என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் எனக் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது திரையரங்குகளில் திரையிடப்படும் அரசு விளம்பரங்களில் எடப்பாடியை சாமியாக சித்தரிப்பது பற்றி கூறுகையில், “அதிகாரம் இருப்பதால் அவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பது போன்று தான். என்னவேண்டும் என்றாலும் செய்வார்கள்” என்றார்.
சிலீப்பர் செல் பற்றி முன்னரெல்லாம் அதிகமாக பேசுவீர்கள், இப்போது அது பற்றியெல்லாம் பேசுவது கிடையாதே? என்ற கேள்விக்கு, ‘நான் எப்போதுமே அதுபற்றி அதிகமாக பேசியது கிடையாது. நீங்கள் தான் கேட்டுகொண்டே இருப்பீர்கள். அதற்கு திரும்ப நான் சொல்லிக் கொண்டிருப்பேன். வாக்கெடுப்பு அன்று அவர்கள் யார் என்பது உங்களுக்கெல்லாம் தெரிய வரும்’ என்று கூறினார்.
பாஜகவினர் தரம் தாழ்ந்து பேசுவது குறித்து கூறுகையில், ‘அவர்களால் இங்கு எதுவும் செய்யமுடியவில்லை என்பதன் விரக்தியால் தான் இது போன்று பேசுகிறார்கள். மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கிறோம். இங்குள்ள அரசாங்கம் மத்திய அரசாங்கத்திற்கு பயப்படுகிற அரசாங்கம், நாம் என்ன சொன்னாலும் கைது செய்யமாட்டார்கள் என்கிற நினைப்பில் தான் பாஜகவினர் உள்ளனர்.
துண்டு பிரசுரம் கொடுத்ததற்கு எங்கள் மீது தேசதுரோக வழக்கெல்லாம் போட்டார் பழனிசாமி. இதுபோன்று பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் என்ன செய்கிறார்கள்’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com