ப்ளட் ப்ரஷரை குறைக்க வேண்டுமா? இந்த ஜூஸை தினமும் பருகுங்கள்!

'டென்ஷன்' இல்லாத நாளே கிடையாது என்று கூறுமளவுக்கு தினமும் ஏதாவது ஒரு விஷயம் நம்மை பதற்றமடைய வைக்கிறது. எல்லாருக்குமே ஏதாவது சில காரணங்களால் மன அழுத்தம் உண்டாகிறது. ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தத்தின் காரணமாக உயர் இரத்த அழுத்தம் (ஹைபர்டென்ஷன்) என்ற பாதிப்பு ஏற்படுகிறது.

ஹைபர்டென்ஷன்

உயர் இரத்த அழுத்தம் 'சைலண்ட் கில்லர்' என்று கூறப்படுகிறது. பாதிப்பின் ஆரம்ப காலத்தில் எந்த அறிகுறிகளும் தெரியாததால் அநேகர் இந்தப் பாதிப்பு இருப்பதை அறிந்துகொள்வதில்லை. ஹைபர்டென்ஷனுக்கு சிகிச்சை எடுக்காவிட்டால் இதய செயலிழப்பு, பக்கவாதம் போன்ற தீவிர பின்விளைவுகள் ஏற்படும். சரியான நேரத்தில் கண்டுபிடித்தால் உரிய மருந்துகள் சாப்பிடுவதன் மூலமும் வாழ்க்கை முறையில் மாற்றங்களை செய்வதன் மூலமும் பாதிப்புகளை தவிர்க்கலாம். வீட்டில் எளிதாக தயாரித்து அருந்தக்கூடிய தக்காளி ஜூஸை தினமும் பருகினால் உயர் இரத்த அழுத்த பாதிப்பை குறைக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆய்வு

ஜப்பானில் 500 பேரிடம் ஆய்வு செய்யப்பட்டது. ஆண்கள், பெண்கள் இருபாலரிலும் வெவ்வேறு வயது கொண்டோர் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டனர். தினமும் தக்காளி ஜூஸ் அருந்தவும், அருந்தும் ஜூஸின் அளவையும் இரத்த அழுத்தத்தின் அளவையும் குறித்து வைத்துக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஓராண்டு முழுவதும் அவர்கள் தக்காளி ஜூஸ் அருந்தினர். இவ்வாறு அருந்தியவர்களில் 94 சதவீதத்தினரில் உயர் இரத்த அழுத்த பாதிப்பின் வாசலில் இருந்தவர்கள், உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருந்தவர்களுக்கு இரத்த அழுத்தம் குறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆண், பெண் இருவருக்குமே இரத்த அழுத்தம் குறைந்திருந்தது. இதயத்திலிருந்து தமனிகளுக்குள் இரத்தம் பாய்ச்சப்படும்போது உள்ள அழுத்தம் (சிஸ்டோலிக்) 141.3 ஆக இருந்தவர்களுக்கு 137 mmHg ஆக குறைந்திருந்தது. இதய துடிப்புகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் தமனிகளில் காணப்படும் அழுத்தம் (டயஸ்டாலிக்) 83.3 ஆக இருந்தவர்களுக்கு 80.9 ஆக குறைந்திருந்தது.

தக்காளியிலுள்ள சத்துகள்

தக்காளியில் உள்ள கரோட்டினாய்டு, வைட்டமின் ஏ, கால்சியம், காமா-அமினோபுடைரிக் அமிலம், லைகோபீன் என்னும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான் (ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்) ஆகியவை உடல் மற்றும் மனரீதியான ஆரோக்கியத்தை காக்க உதவுகின்றன. இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, கண் பார்வை மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கும் தக்காளி ஜூஸ் உதவுகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை (மெட்டோபாலிசம்) தூண்டுவதோடு, செல்களில் ஏற்படும் அழற்சியை குறைக்கிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. தக்காளியில் வைட்டமின்கள் சி மற்றும் பி, பொட்டாசியம் தாது ஆகியவையும் காணப்படுகின்றன. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு தக்காளி ஜூஸை உப்பு சேர்க்காமல் குடிக்கவேண்டும் என்பது முக்கியமாகும்.

More News >>