ஜெயங்கொண்டம் தொகுதியை கலக்கும் காடுவெட்டி குரு மனைவி..
ஜெயங்கொண்டம் தொகுதியில் ஐஜேகே கட்சியின் சார்பில் களம் இறங்கியுள்ள காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளார்.
ஜெயங்கொண்டம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வழக்கறிஞர் பாலு போட்டியிடுகிறார். திமுகவில் கேஎஸ்கே கண்ணனும், அமமுகவில் சிவா, நாம்தமிழர் கட்சியில் நீலமகாலிங்கம் போட்டியிடுகிறார்கள். மக்கள் நீதிமய்யம் கூட்டணியில் ஐஜேகே கட்சியின் சார்பில் குருவின் மனைவி சொர்ணலதா நிறுத்தப்பட்டுள்ளார்.
ஜெயங்கொண்டம் தொகுதியில் துரோகிகளுக்கு பாடம் புகட்டுவோம் என்று காடுவெட்டி குருவின் ஆதரவாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வன்னியர் சங்கத் தலைவராக இருந்த காடுவெட்டி குருவின் அனல் தெறிக்கும் பேச்சுக்களால் ஜெயங்கொண்டம் தொகுதி எப்போதும் பரபரப்பாக இருக்கும். இப்போது அவரது மனைவி சொர்ணலதா, மகன் கனலரசன் ஆகியோரின் பரப்புரைகளால், அக்னி வெயில் வருவதற்கு முன்பே அனல் தெறிக்கும் களமாகி விட்டது. ஜெயங்கொண்டம் தொகுதி, கருப்புத் தங்கம் என்றழைக்கப்படும் நிலக்கரியின் சொர்க்க பூமியாக விளங்குகிறது. தொகுதியின் தெற்கு பகுதியான தா.பழுர் ஒன்றியம், கொள்ளிடக் கரையோரம் அமைந்துள்ளதால் வளமான டெல்டா பாசனப் பகுதியாகவும், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஒன்றியங்களில் முந்திரி பயிர் முதன்மை விவசாயப் பயிராகவும் விளங்கி, விவசாயிகளின் தாய்மடியாக விளங்குகிறது.
வன்னியர்கள் 38 சதவீதம், பட்டியல் சமூகத்தினர் 25 சதவீதம், முதலியார் 17 சதவீதம், இதர வகுப்பினர் 20 சதவீதம் என்று வாக்காளர்களை உள்ளடக்கியது ஜெயங்கொண்டம் தொகுதி. அதிமுகவுக்குத் தொடர் வெற்றியை அள்ளித் தந்த ஜெயங்கொண்டம் மக்கள், தங்கள் அடிப்படைத் தேவைகளையாவது ஆளும் கட்சி எம்.எல்.ஏ ராமஜெயலிங்கம் நிறைவேற்றித் தருவார் என எதிர்பார்த்து ஏமாந்து போயிருக்கிறார்கள். அதனால்தான், அந்த தொகுதியை பாமகவுக்கு தள்ளி விட்டு விட்டது அதிமுக என்ற பேச்சும் இருக்கிறது. மேலும், காடுவெட்டி குருவின் ஆதரவாளர்கள் கூறுகையில், வன்னியர்களில் பெரும்பான்மையினர் தங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்றனர். இதனால், இந்த தொகுதியில் பாமக மற்றும் திமுகவுக்கு எதிராக சொர்ணலதா குரு கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளார்.
தொகுதி மக்கள் கூறும் பிரச்னைகள் வருமாறு:
1. பல ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் உள்ள ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையத் திட்டத்தால், ஜெயங்கொண்டம் பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஒரு ஏக்கர் நிலத்தை 15 ஆயிரம் ரூபாய்க்கு வழங்கிவிட்டு, தற்போது சொந்த ஊரில் அகதிகளாக வாழ்கின்றனர். நீதிமன்றத்தை நாடியதன் விளைவாக, ஏக்கர் ஒன்றுக்கு 15 லட்சம் ரூபாய்வரை இழப்பீடு வழங்க உத்திரவிடப்பட்டது. ஆனால், அந்தத் தொகை இன்றுவரை வழங்கப்படவில்லை. எனவே, ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டத்துக்கு நிலம், வீடுகளைக் கொடுத்தவர்களுக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி உரிய இழப்பீடு வழங்காததால், மீண்டும் நிலத்தை தங்களிடமே ஒப்படைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல ஆண்டுகளாகியும் இப்பிரச்னை ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களால் தீர்க்கப்படவில்லை.
2. அரியலூர் மாவட்டத்தில் 1978-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட டெல்டா பாசனப் பகுதியில் தா.பழுர் உள்ளதாக எழுத்தளவில் மட்டுமே உள்ளது. விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய முன்னுரிமைகள் மற்றும் பலன்களை இதுவரை கிடைக்கவில்லை.
3. தா.பழுர் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடை மற்றும் குறைந்த மின்னழுத்ததை மாற்றிச் சீரான மின்சாரம் அளிக்கப்படவில்லை.
4. மிகவும் பின்தங்கிய பகுதியான ஜெயங்கொண்டம் தொகுதியில், சிறு சிறு தொழிற்சாலைகள் தொடங்கி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படவில்லை.
5.விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், தா.பழூரில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் உருவாக்கப்படவில்லை.
6.நெசவுத் தொழிலாளர்களின் நலன் காக்க, நெசவாளர்களுக்கு நூல் வழங்கியும், உற்பத்தி செய்யப்படும் துணிகளை வாங்கிக் கொள்ள ஒருங்கினைந்த அரசுக் கொள்முதல் நிலையயம் உருவாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும், ஜெயங்கொண்டத்தில் ஜவுளிபூங்கா அமைக்கவும், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் அளிக்கவும் வைக்கப்பட்ட கோரிக்கைகளை இதுநாள்வரை நிறைவேற்றப்படவில்லை.
7. தொகுதியின் முதன்மை விவசாயப் பயிரான முந்திரி பழத்தில் இருந்து ஜுஸ் தயாரிக்கும் தொழிற்சாலை அரசு சார்பில் ஏற்படுத்தவும், முந்திரிக் கொட்டைகளை அரசே நேரடி கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இவ்வாறு தெரிவித்தனர்.