தவானின் மிரட்டலிலும் கிருஷ்ணாவின் கலக்கலிலும் ஜெயித்த இந்தியா
இங்கிலாந்து எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்தியா. பூனா எம்.சி.ஏ. ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை இந்தியா வென்றுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து, இந்தியாவை பேட் செய்யும்படி அழைத்தது. ஆரம்பத்தில் தடுமாறிய இந்தியா, 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோகித் சர்மாவின் விக்கெட்டை இழந்தது. அவர் 42 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 2 ரன்களில் சதத்தை தவற விட்டார். அவர் 106 பந்துகளை சந்தித்து 98 ரன்கள் எடுத்து பென் ஸ்டோக்ஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் ஐயரும், ஹர்திக் பாண்ட்யாவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 56, கே.எல். ராகுல் 62, க்ருணால் பாண்ட்யா 58 என்று ரன்களை சேர்த்து இந்தியா 317 என்ற கௌரவமான ஸ்கோரை எட்ட உதவினர்.
அடுத்து பேட் செய்ய ஆரம்பித்த இங்கிலாந்து அணியினர் ஜெட் வேகத்தில் ரன்களை குவித்தனர். ஜேசன் ராய் 35 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். பேர்ஸ்டோ 66 பந்துகளில் 94 ரன்களை குவித்தார். இந்தப் போட்டியில் அறிமுகமான வேகப் பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, ராய், பென் ஸ்டோக்ஸ், சாம் பில்லிங்ஸ், டாம் கர்ரன் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேர்ஸ்டோ, மோர்கன், பட்லர் ஆகிய முக்கிய வீரர்களை ஷர்துல் தாகூர் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி 42.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆகவே, இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷிகர் தவானுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.