ஃப்ரீ அமேசான் கிஃப்ட் வாட்ஸ்அப் மெசேஜ்: ஏமாந்துவிடாதீர்கள்!

அமேசான் நிறுவனத்தின் 30வது ஆண்டுவிழாவை முன்னிட்டு வெகுமதி அளிக்க இருப்பதாக வாட்ஸ்அப்பில் செய்திகள் பகிரப்பட்டு வருகிறது. இது மோசடி முயற்சியாக இருக்கக்கூடும் என்பதால் பயனர்கள் இதுபோன்ற இலவச பரிசுகள் குறித்த இணைப்புகளை புறக்கணிக்கவேண்டும் என்று இணைய பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்ற இணைப்புகளை கிளிக் செய்தால் சர்வே ஒன்றை எடுப்பதாகக் கூறி பணம் மற்றும் தனிநபர் தகவல்களை திருட மோசடிக்காரர்கள் முயற்சிப்பார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

"அமேசான் 30வது ஆண்டுவிழா கொண்டாட்டம்... அனைவருக்கும் இலவச வெகுமதி" என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டள்ளது. பரிசை வெல்வதற்காக இணைப்பு ஒன்றும் கொடுக்கப்படுகிறது. அந்த இணைப்பை சொடுக்கினால் கணக்கெடுப்பு (சர்வே) பக்கம் ஒன்று திறக்கிறது. சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்காக என்று நான்கு கேள்விகள் அந்தக் கணக்கெடுப்பில் கேட்கப்படுகின்றன. வயது, பாலினம், அமேசான் சேவையின் தரம் குறித்த கருத்து என்பது போன்ற கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளன. கூடவே பயனர் ஆண்ட்ராய்டு போன் அல்லது ஐபோன் எதை பயன்படுத்துகிறார் என்ற விவரமும் அதில் கேட்கப்படுகிறது. பயனரை அவசரப்படுத்தும்விதமாக டைமர் ஒன்றும் திரையில் ஓடுகிறது. நேரம் முடிவதற்குள் சர்வேக்கு பதில் அளிக்கவேண்டும் என்ற பதற்றம் பயனரை தொற்றிக்கொள்ளும். வேகவேகமாக எல்லாவற்றையும் முடித்தால் திரையில் அநேக பரிசுகள் தோன்றும். அதில் ஒன்றை தெரிந்தெடுத்தபின்னர், இந்த கேள்விகளை 5 வாட்ஸ்அப் குழுக்கள் அல்லது 20 தனி நபர்களுக்கு அனுப்புங்கள் என்றும் கட்டளை வரும். பெரும்பாலும் ஏதாவது ஒன்று சரியாக முடியாமல் போகும்.

இதுபோன்ற கேள்வி பதில் கணக்கெடுப்பில் பங்குபெற்று யாருக்கும் பரிசு வந்து சேர்ந்ததாக தெரியவில்லை. மேலும் பெருநிறுவனங்கள் இதுபோன்ற கணக்கெடுப்புகள் மூலம் வெகுமதிகளை தருவதில்லை. இதுபோன்ற பகிர்வுகளில் வரும் இணைப்புகள் பெருநிறுவனங்களை சேர்ந்தவை போன்று போலியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இவற்றுக்கும் அந்த நிறுவனங்களுக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. ஆகவே, பரிசுக்கு ஆசைப்பட்டு தகவல்களை, பணத்தை மோசடியாளர்களிடம் இழந்துவிடாமல் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

More News >>