திருவையாறில் கடும் போட்டியை ஏற்படுத்தும் ஐஜேகே திருமாறன்..
திருவையாறு தொகுதியில் திமுக, பாஜக கட்சிகளுக்கு கடும் போட்டியை கமல் கூட்டணியில் ஐஜேகே வேட்பாளர் திருமாறன் ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த 1989ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் சிவாஜியை தோற்கடித்த தொகுதி திருவையாறு. காங்கிரஸ் 2 முறையும், திமுக 7 முறையும், அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ள இந்த தொகுதியில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. சிவாஜியை தோற்கடித்த துரை சந்திரசேகரனே இந்த முறையும் திமுக வேட்பாளராக களத்தில் உள்ளார். அதிமுக அணியில் பாஜக சார்பில் பூண்டி வெங்கடேசனும், அமமுக சார்பில் வேலு கார்த்திகேயனும் போட்டியிடுகிறார்கள். கமலின் மக்கள் நீதிமய்யம் கூட்டணியில் ஐ.ஜே.கே. போட்டியிடுகிறது. திருமாறன் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். திமுக, பாஜக வேட்பாளர்களுக்கு கடும் போட்டியை கொடுத்து வருகிறார்.
கஜா புயல் காலத்தில், இந்த பகுதி மக்களுக்கு ஐ.ஜே.கே நிறுவனர் டாக்டர் பாரிவேந்தரும், கட்சித் தலைவர் ரவி பச்சமுத்துவும் செய்த உதவிகளை மக்கள் மறக்கவில்லை. அவர்கள் நன்றியுடன் அதை நினைவு கூர்கிறார்கள். அதனால் எனக்கு ஆதரவு பெருகியுள்ளது என்று திருமாறன் கூறுகிறார். கல்லணைக் கால்வாயின் வடகரையில் அமைந்துள்ள நாச்சியார்பட்டி கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் திருமாறன். பி.எஸ்.சி வேதியியல் படித்துள்ள திருமாறன், ஏழை எளிய மக்களுக்கு வாரி வழங்கும் பாரிவேந்தரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 2010-ம் ஆண்டு முதல் ஐ.ஜே.கே.வில் மக்கள் சேவையாற்றி வருகிறார்.
பூதலூர், செங்கிப்பட்டி பகுதியில் புதிய கட்டளை மேட்டு கால்வாய், உய்யகொண்டான் நீட்டிப்பு கால்வாய் மற்றும் அவற்றைச் சார்ந்த 81 ஏரிகள் மூலம் 7,000 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் கால்வாய்களையும், ஏரிகளையும் முழுமையாகத் தூர் வாரி, நீர்வரத்துப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுவேன் என்று அவர் வாக்காளர்களுக்கு உறுதி கொடுத்துள்ளார்.
கல்லணையில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தாலும், இன்னும் நிறைவடையாமல் உள்ளது. திருக்காட்டுப்பள்ளி - கண்டியூர் சாலை விரிவாக்கப் பணிகள் முடிவடையவில்லை. தஞ்சாவூர் - அரியலூர் இடையே புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. மக்கள் தன்னை தேர்ந்தெடுத்தால், இவை அனைத்தையும் போர்க்கால அடிப்படையும் முடித்துத் தருவேன் என உறுதியளித்துள்ளான் திருமாறன்.
கொள்ளிடத்தில் மணல் திருட்டு என்பது, மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. மேலும், அரசு மணல் குவாரிகளாலும், சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாக விவசாயிகள் புகார் எழுப்பி போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். இவற்றுக்கு தீர்வு காணப்பட்டு, மணல் திருட்டைத் தடுத்து நிறுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தைக் காக்க ஒரு விவசாயியாக களத்தில் நின்று பாடுபடுவேன் எனவும் மக்களிடம் உறுதிமொழி அளித்துள்ளார் திருமாறன்.
திருவையாறு நகரில் பாதாளச் சாக்கடை வசதி இல்லாததால், பாசன வாய்க்கால்களில் கழிவு நீர் செல்கிறது. இதனால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பாதாள சாக்கடைத் திட்டம் உடனடியாகத் தொடங்கப்படும் எனவும், திருவையாற்றில் புறவழிச்சாலையும் உயர்மட்டப் பாலமும் அமைத்துப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண்பதுடன், சாலைப் போக்குவரத்தை மேம்படுத்துவேன் எனவும் திருமாறன் சபதமேற்றுள்ளார்.
திருவையாறு தொகுதியில் 50-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகள் இருந்தாலும், அரசுக் கல்லூரி ஏதுமில்லை. இதைப் போக்கும்விதமாக, திருக்காட்டுப்பள்ளியில் அரசுக் கல்லூரி அமைக்கப்படும் எனவும், வாழை, நெல், கரும்பு பயிர்கள் கெடாமலிருக்க, குளிர்பதன கிடங்கு அமைத்துத் தருவேன் எனவும் திருமாறன் கூறியுள்ளார்.