ஒர்க் ஃபிரம் ஹோம்: முதுகு வலியை குணமாக்குவது எப்படி?

ஓராண்டு கடந்த நிலையிலும் கொரோனா பாதிப்பு முற்றிலும் மறைந்துவிடவில்லை. அநேக மாதங்கள் வீட்டில் அமர்ந்து வேலை செய்து சிலர் இப்போது அலுவலகத்திற்குத் திரும்பியிருக்கலாம்; பலர் இன்னும் வீட்டில் இருந்தே பணி செய்துகொண்டுள்ளனர். வீட்டில் வேலை செய்வதற்கான சரியான மேசை மற்றும் இருக்கை அமைப்புகளை சிலர் ஏற்பாடு செய்து கொண்டிருக்கலாம். பலர் வீட்டில் இருக்கின்றவற்றை கொண்டே சமாளித்து கொண்டிருக்கலாம்.

சரியான அமைப்பு இல்லாமல் அமர்ந்து வேலை செய்வதாலும், வெளியே பயணம் செய்தல் மற்றும் அலுவலகத்தில் நடமாடுதல் போன்ற உடல் செயல்பாடுகள் இல்லாததால் பலருக்கு முதுகு வலி பிரச்னை இருக்கக்கூடும். அமர்ந்தே வேலை செய்வதால் பலருக்கு உடல் எடை அதிகரித்து அதன் காரணமாகவும் முதுகு வலி ஏற்படலாம். முதுகு வலி நம்முடைய செயல்பாட்டை அப்படியே முடக்கிப் போட்டுவிடும்.

சரிவிகித உணவு

முதுகுவலியை குணமாக்க ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதை தவிர்த்து, உடலுக்கு வேலை கொடுப்பது அவசியம். சில உணவுகளை அதிகமாக சாப்பிடுவதாலும் முதுகு வலியை தவிர்க்கலாம். சிலர் உடல் எடையை குறைப்பதற்காக சாப்பிடும் அளவை குறைக்கின்றனர். சரிவிகித உணவு உடலுக்குக் கிடைக்காவிட்டால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காமற்போய் முதுகுவலி ஏற்படலாம். ஆகவே, எடையை குறைப்பதற்காக பட்டினி இருப்பதை தவிர்க்கவேண்டும்.

வைட்டமின் டி

முதுகு வலி வந்தால், வைட்டமின் டி குறைவு முக்கியமான காரணமாக இருக்கலாம். ஆகவே, இரத்தத்தில் போதுமான அளவு வைட்டமின் டி இருக்கிறதா என்று சோதித்து பார்க்கவேண்டும். 25 ஹைட்ராக்ஸி வைட்டமின் டியின் அளவும் 50 முதல் 60 ng/ml என்ற அளவில் இருக்கவேண்டும். முட்டை, பால், மீன், காளான் ஆகியவற்றை சாப்பிட்டால் வைட்டமின் டி சத்து உடலில் சேரும்.

எள்

தினமும் 2 தேக்கரண்டி அளவு கறுப்பு எள்ளை உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். வெள்ளை எள், தோல் நீக்கப்பட்டதாக இருக்கும். ஆகவே, கறுப்பு எள்ளை சாப்பிட வேண்டும். கறுப்பு எள், நாம் சாப்பிடும் உணவிலிருந்து கால்சியம் (சுண்ணாம்புச் சத்து) உடலில் சேருவதற்கு உதவும்.

மெக்னீசியம்

மெக்னீசியம் சத்து குறைவினாலும் முதுகு வலி உண்டாகலாம். பீன்ஸ், கீரை வகைகள் குறிப்பாக பசலை கீரை, முந்திரி, பாதாம், பருப்பு வகைகள், அத்திப்பழம், பூசணி விதை, சுரைக்காய் ஆகியவற்றில் மெக்னீசியம் தாது உள்ளது. அவற்றை அதிகமாக சாப்பிட்டால் மெக்னீசியம் குறைபாட்டினால் ஏற்படும் முதுகு வலி குணமாகும்.

குங்கிலியம்

குங்கிலியம் என்னும் போஸ்வெலியா பிசின், முதுகு வலிக்கு நல்ல தீர்வாகும். குங்கிலிய தூள் 100 கிராம் எடுத்து, அரை லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வைத்து முதுகில் பூசலாம். குங்கிலியத்தை காய்சி வடித்து 450 மில்லி கிராம் பருகிவந்தால், எலும்பு தொடர்பான வலிகள் குணமாகும்.

More News >>