தாய் பற்றிய ஆ.ராசா பேச்சு.. பிரச்சாரத்தில் கலங்கிய முதல்வர்!
திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருவரின் அரசியல் வளர்ச்சியை ஒப்பீடு செய்து ஆ.ராசா பேசியது தமிழக அரசியலில் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்த விவகாரத்தில் ஆ.ராசாவுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. ஆ.ராசா மீது அ.தி.மு.க தரப்பில் தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று திருவொற்றியூரில் பிரச்சாரம் செய்த முதல்வர் பழனிசாமி இந்த விவகாரத்தை பற்றி பேசும்போது கண்கலங்கினார். பேச்சின் தொடக்கத்திலேயே சிறிது நேரம் பேச முடியாமல் தலை கவிழ்ந்து நின்ற அவர், பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கியவர், ``என் தாயை பற்றியே எவ்வளவு கீழ்த்தரமாக பேசியுள்ளார் ஆ.ராசா; நாளை திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் நிலை என்ன ஆகும்?
திமுக திட்டமிட்டு என் மீது அவதூறு பிரச்சாரம் செய்கிறது. நான் ஒரு முதல்வராக இருக்கிறேன். இதை இங்கு பேசக்கூடாது என்றுதான் வந்தேன். ஆனால், இங்கு தாய்மார்களைப் பார்த்ததால் பேசுகிறேன்.
என் தாய்க்காக மட்டும் நான் இந்தப் பிரச்சினையைப் பார்க்கவில்லை. ஒரு குடும்பத்தில் ஒரு தாயாகப் பாருங்கள். எவ்வளவு கீழ்த்தரமாகப் பேசியிருக்கிறார். ஆக, ஒரு சாதாரண மனிதன் முதல்வராக இருந்தால் என்னென்னவெல்லாம் பேசுவார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இன்றைக்கு ஒரு முதல்வருக்கே இப்படிப்பட்ட நிலை என்றால் சாதாரண மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது? யார் தாயை இழிவாகப் பேசினாலும் நிச்சயம் ஆண்டவன் தண்டனை தருவார்; ஏழைத் தாயாக இருந்தாலும், பணக்கார தாயாக இருந்தாலும் தாய்தான் உயர்ந்த ஸ்தானம்" என்றார்.