சசியின் ஆன்மீக அரசியல்.. எடப்பாடியை வீழ்த்துமா..
சசிகலாவின் தொடர் ஆன்மீகப் பயணத்திலும் ஒரு அரசியல் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா, கடந்த பிப்ரவரியில் விடுதலையாகி சென்னை திரும்பினார். அவருக்கு ஓசூரில் இருந்து சென்னை வரை நீண்ட பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர், தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால், அவர் சென்னை வந்து சேர்ந்த பிறகு அதிமுக அமைச்சர்களோ, அவரால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியோ அவரிடம் உடல்நலம் விசாரிக்கக் கூட வரவில்லை.
அது மட்டுமில்லாமல், சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவரை கட்சியில் சேர்க்க மாட்டோம் என்றும் வெளிப்படையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன்மூலம், சசிகலாவை ஒரு செல்லாக்காசு போல் ஆக்கி விட்டதால், சசிகலாவின் ஆதரவாளர்கள் குறிப்பாக டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் இருப்பவர்கள் கொதித்தனர். ஆனாலும், டி.டி.வி.தினகரனின் அமமுகவும், அதிமுகவும் இணையலாம் என்ற பேச்சு அடிபட்டதால் பொறுமையாக இருந்தனர். அப்படி நடக்கவில்லை. மாறாக அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக சசிகலா அறிவித்தார். பாஜகவின் மூலம் முதல்வர் எடப்பாடி தரப்பு, சசிகலாவுக்கு நெருக்கடி கொடுத்து அப்படி அறிவிக்கச் செய்ததாக தகவல்கள் வெளியாயின. இதன்பிறகு, அமமுக கட்சியும், தேமுதிகவும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், சசிகலா கடந்த சில நாட்களாக நீண்ட ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு வருகிறார். முதலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உறவினர்களின் வீடுகளுக்கு சென்ற அவர், அதன்பிறகு கோயில் கோயிலாக செல்ல ஆரம்பித்தார். நாகை நாகநாதசுவாமி கோயிலில் ராகு, கேது சன்னதிகளில் சிறப்பு பரிகார பூஜைகளை செய்தார். அடுத்து, நாகூர் தர்கா, வேளாங்கண்ணி கிறஸ்தவ ஆலயம் என்று மும்மத வழிபாட்டு தலங்களுக்கும் சென்றார்.
இதைத் தொடர்ந்து நேற்று(மார்ச்28) ராமேஸ்வரத்திற்கு வந்த சசிகலா, இரவு 7 மணியளவில் திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலுக்கு வந்தார். அங்கு தரிசனத்தை முடித்து விட்டு மீண்டும் ராமேஸ்வரத்திற்கு சென்று தங்கினார். இன்று காலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஸ்படிக லிங்க பூஜையில் பங்கேற்றார். மேலும் சிறப்பு பூஜைகளை செய்து விட்டு தஞ்சாவூருக்கு திரும்பினார்.
சசிகலாவின் ஆன்மீகப் பயணத்தின் போது ஆங்காங்கே அமமுக வேட்பாளர்கள் அவரை சந்தித்து ஆசி பெற்றனர். ஸ்ரீரங்கத்தில் சாருபாலா தொண்டமான், நாகையில் மஞ்சுளா சந்திரமோகன் என்று பலரும் சந்தித்தனர்.
இது பற்றி அமமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், சசிகலா ஆன்மீகப் பயணத்திற்குள் ஒரு அரசியலும் இருக்கிறது. அ.ம.மு.க. கட்சியினருக்கு தனது ஆதரவு உள்ளதை அவர் மறைமுகமாக வெளிப்படுத்துகிறார். அதிமுக தொண்டர்கள் மத்தியில், தான் இன்னும் ஓய்ந்து விடவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார். அத்துடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்களை வீழ்த்துவதற்கும் அவர் மறைமுகமாக பணியாற்றி வருகிறார். தேர்தலுக்கு பின்பு, அதிமுக கட்சியின் பெரும்பகுதி தன்னிடம் வந்து விடும் என்று சசிகலா உறுதியாக நம்புகிறார். அதற்காக அரசியல்ரீதியாக சில காய்களை நகர்த்தி வருகிறார். அது தேர்தல் முடிந்த பின்புதான் வெளியே தெரியும். தேர்தல் முடிவுக்குப் பின், அதிமுகவில் பல அதிரடி மாற்றங்களை காணலாம் என்று தெரிவித்தார்.
ஆன்மீக அரசியல் என்ற கோஷத்துடன் வந்து பாதியில் அரசியலை விட்டு ஒதுங்கினார். ஆனால், அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்து, ஆன்மீக அரசியலை சசிகலா கையில் எடுத்துள்ளார். இதில் வெற்றி பெறுவாரா?