அதிமுகவினரை குறிவைக்கும் வருமானவரி துறை.. கைவிடுகிறதா பாஜக?

தமிழகம் முழுவதும் அதிமுகவினரை குறிவைத்து வருமான வரி ரெய்டுகள் தொடர்கின்றன. மணப்பாறை எம்.எல்.ஏ. வீட்டில் இருந்து ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதிமய்யம், நாம்தமிழர் என்று 5 அணிகள் போட்டியிட்டாலும் பெரும்பாலான தொகுதிகளில் திமுக, அதிமுக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. மற்ற கூட்டணிகள் இந்த இரு அணிகளின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்திகளாக மாறியுள்ளன.

இந்நிலையில், ஆரம்பத்தில் திருவண்ணாமலை, கரூர் உள்ளிட்ட இடங்களில் திமுக, மதிமுக பிரமுகர்களின் வீடுகளில் வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்தினர். பல இடங்களில் திமுகவினருக்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அதன்பிறகு அதிமுகவினரே அதிகமாக குறிவைக்கப்பட்டு வருகிறார்கள். கடலூர் அமைச்சர் எம்.சி.சம்பத் உறவினர்கள் வீடுகளில் ரூ.9 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பிறகு விராலிமலை விஜயபாஸ்கர் வீடு, கம்பெனிகள், அமைச்சர் உதயகுமாருக்கு சொந்தமான குடோன் என்று வரிசையாக அதிமுகவினரின் வீடுகளில் ஐ.டி ரெய்டுகள் தொடர்கின்றன.

நேற்றிரவு (மார்ச்28) ஒரு அதிமுக எம்எல்ஏ வீட்டில் ஒரு கோடி சிக்கியிருக்கிறது. திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் 3வது முறை போட்டியிடும் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகர் வீடு, கம்பெனிகளில் நேற்று மாலை முதல் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது. அவரது கம்பெனியில் ஜேசிபி டிரைவராக வலசுப்பட்டியை சேர்ந்த அழகர்சாமி, கோட்டைப்பட்டியை சேர்ந்த ஆனந்த் என்ற முருகானந்தம் ஆகியோர் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. எம்எல்ஏவுக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் தங்கபாண்டியன் வீட்டிலும், வீரகோவில்பட்டியில் ஒரு கல்குவாரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நள்ளிரவில் சோதனை மேற்கொண்டனர்.

இதில், வலசுப்பட்டி அழகர்சாமி வீட்டு சோதனையில் ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அழகர்சாமியின் வீட்டில் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், பக்கத்தில் இருந்த வைக்கோல்போருக்குள் ஐநூறு ரூபாய் கட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அழகர்சாமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

அதிமுகவினர் வீடுகளில் தொடர்ச்சியாக ரெய்டுகள் நடப்பதால், அதிமுக வேட்பாளர்களாக களத்தில் நிற்கும் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் பயந்து போயுள்ளனர். இதனால், பணபட்டுவாடா செய்வதற்கும் தயங்குகின்றனர். பெரிய அளவில் சிக்கினால் பணமும் போய் விடும். தேர்தலும் நின்று போய் விடும் என்று அவர்கள் பீதியடைந்துள்ளனர். அதிமுகவுடன் கூட்டணி அமைத்து கொண்டே, அந்த கட்சியை காலி பண்ணும் வேலையில் பாஜக இறங்கியிருக்கிறதோ என்ற சந்தேகமும் அதிமுகவினர் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கனவே பல திசைகளில் எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நேரத்தில் அதிமுவினருக்கு இதுவும் பெரிய பிரச்னையாகி இருக்கிறது.

More News >>