அசாம் தேர்தலில் பாஜக வேட்பாளர் காரில் வாக்குப்பதிவு இயந்திரம்.. மறுதேர்தலுக்கு உத்தரவு..
அசாம் மாநில தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்ததும் பாஜக வேட்பாளர் காரில் ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. மே2ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அசாமில் நேற்று(ஏப்.1) 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. பதார்கண்டி தொகுதியில் பாஜக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. கிருஷ்ணேந்து பவுல் போட்டியிடுகிறார்.
அங்கு கரிம்கன்ச் பகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அப்போது ஒரு வாக்குப்பதிவு இயந்திரம், பாஜகவின் கிருஷ்ணேந்து பவுலின் பொலிரோ காரில் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதை யாரோ வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவை பத்திரிகையாளர் அடானு புயான் என்பவர் தனது சமூக வலை பக்கத்தில் வெளியிட்டார். நேற்றிரவு 10 மணிக்கு இந்த வீடியோ அசாம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, இந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். மேலும், தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களை(இவிஎம்) பயன்படுத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதை அனைத்து எதிர்க்கட்சிகளும் உணர வேண்டும். இதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, அந்த வாக்குச்சாவடியில் பணியாற்றிய 4 பேரை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்திருக்கிறது. மேலும், அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டுள்ளது. பாஜக வேட்பாளரின் காரில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் சீலிடப்பட்ட நிலையில் இருந்தாலும், மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.