முதல் ஆளாக வாக்களித்த அஜித் – விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் சட்டப்பேரவை வாக்குப்பதிவு!
தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. எந்தவித இடையூறுமின்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவானது நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தவண்ணம் உள்ளனர். பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் காலை முதலே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். மேலும், கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்ப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் மாலை 6 முதல் 7 மணி வரை வாக்களிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே நடிகர் அஜித் தன் மனைவி ஷாலினியுடன், திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். பின்னர் அவரை சுற்றியிருந்த ரசிகர்கள் அவரிடம் செல்பி எடுக்க முயற்சித்தனர். ஆனால், அதனை அஜித் தடுத்து அவர்களை அங்கிருந்து கிளம்புமாறு வலியுறுத்தினார். தொடர்ந்து, வாக்குப்பதிவு தொடங்கியதும், அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி இருவரும் வாக்களித்துவிட்டு புறப்பட்டுச்சென்றனர்.
இதேபோல் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார். சென்னை தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவக்குமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் வாக்களித்தனர். மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன், தன் மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்சரா ஹாசனுடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.