விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு – அரசியல்கட்சித் தலைவர்கள் வாக்களித்தனர்!

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. சரியாக இன்று காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். சினிமா நட்சத்திரங்கள், அஜித், சூர்யா, ரஜினி உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர். இது ஒருபுறம் இருக்க, அரசியல் கட்சித்தலைவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

அந்தவகையில், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாக்குப்பதிவு செய்வதற்கு முன்பாக மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். பின்னர் மு.க.ஸ்டாலின் தன் மனைவி துர்கா, மகன் உதயநிதி ஆகியோருடன் தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அதேபோல விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்களித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வாக்களித்தார். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள வாக்குசாவடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது வாக்கினை பதிவு செய்தார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்களித்தார்.

திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மேற்கு தொகுதி வேட்பாளரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என் நேரு வாக்கு செலுத்தினார். இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.என் நேரு, ``தமிழகம் முழுவதும் திமுகவிற்கு சாதகமான அலை வீசி வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி - மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பு ஏற்பார். எங்கு சென்றாலும் மக்கள் எங்களுக்கு நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர் என்றார்.

More News >>