நூதன முறையில் வந்து வாக்களித்த நடிகர் விஜய் – பெட்ரோல், டீசல் விலைக்கு எதிர்ப்பு!
பெட்ரோல் விலை உயர்வை குறிக்கும் வகையில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார். தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. சரியாக இன்று காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
சினிமா நட்சத்திரங்கள், அஜித், சூர்யா, ரஜினி உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர். இந்நிலையில் நடிகர் விஜய் எப்போது வாக்களிப்பார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். எப்போதும் காரில் வந்து வாக்களிக்கும் நடிகர் விஜய், யாரும் எதிர்பார்க்காத வகையில் சைக்களில் வந்தார். அவர் வரும் வழியில் ஏராளாமான ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்தனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் அணிந்துகொண்டு, சைக்கிளில் வந்த நடிகர் விஜயை பலரால் அடையாளம் காண முடியவில்லை. நீலாங்கரை வாக்குசாவடிக்கு சைக்கிளில் வந்த நடிகர் விஜய் சைக்கிளை நிறுத்திவிட்டு, அங்குள்ள வாக்குச்சாவடிக்குச்சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறிக்கும் வகையிலும், தனது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையிலும், நடிகர் விஜய் நூதன முறையில் வாக்களித்திருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.