டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி எப்போது? – வெளியான தகவல்!
கடந்த 2016ம் ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் (டி.என்.சி.ஏ) டி.என்.பி.எல் எனப்படும் தமிழ்நாடு பிரிமியர் லீக் எனப்படும் 20ஓவர் கிரிக்கெட் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை மொத்தமாக 4 டி.என்.பி.எல். போட்டிகள் நடைபெற்றுள்ளன.
கடந்த கால போட்டிகளில் 2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில் சேப்பாக் சூப்பர்கில்லீஸ் 2 முறை வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்சென்றது. அதேபோல டுட்டி பேட்ரியாட்ஸ் அணி 2016ம் ஆண்டு கோப்பை வென்றது. மதுரை பாந்தர்ஸ் 2018ம் ஆண்டு ஒருமுறை கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் 5வது டி.என்.பி.எல் போட்டிகள் கடந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த ஐ.பி.எல் போட்டிகள் முடிந்த பிறகு டிஎன்பிஎல் போட்டிகள் தொடங்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருந்த காரணத்தால் போட்டியை நடத்த முடியவில்லை. இதனால் டி.என்.பி.எல். போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, 5-வது டி.என்.பி.எல். போட்டியை இந்த ஆண்டு நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஜூன் 4-ந்தேதி முதல் ஜூலை 4-ந்தேதி வரை ஒருமாத காலம் இந்த தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகள் நடத்தலாம் என முடிவு செய்யபட்டுள்ளது.
இதற்கான அனுமதியை கேட்டு இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்துக்கு (பி.சி.சி.ஐ.) தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கடிதம் எழுதி உள்ளது. இதை டி.என்.சி.ஏ. செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார். கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் 4 நகரங்களில் டி.என்.பி.எல். போட்டியை நடத்த முடிவு இந்திய கிரிக்கெட் கட்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.