தாய்லாந்தில் ஒலித்த புரட்சி குரல் – சர்வதேச ஊடகங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய மியான்மர் அழகி!
கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் மியான்மர் ராணுவக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவிழக்கப்பட்டு ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ஆங்சாங்சூகி சிறைவைக்கப்பட்டுள்ளார். அமல்படுத்தப்பட்டுள்ள ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்தநிலையில் தாய்லாந்தில் நடைபெற்ற அழகி போட்டி ஒன்றில் கலந்து கொண்ட மியான்மர் நாட்டு அழகி ஹான் லே, மியான்மர் ராணுவத்துக்கு எதிராக பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது 2 நிமிடப் பேச்சு சர்வதேச பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாகியுள்ளது.
தாய்லாந்தில் மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2020' என்ற அழகி போட்டி நடைபெற்றது. இதில் மியான்மரைச் சேர்ந்த அழகி ஹான் லே கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,இன்று எனது நாட்டில் பல மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஜனநாயகத்துக்காக மியான்மர் மக்கள் சாலைகளில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். மியான்மருக்கு உதவுங்கள். மியான்மருக்கு தற்போது சர்வதேச உதவி அவசியம் தேவைப்படுகிறது. சிறந்த உலகை உருவாக்குவோம் என கூறினார்.
ஹான்லேவுக்கு வயது 22. அவர் ஒரு உளவியல் மாணவி. அவர் வெறும் குரல் மட்டும் கொடுக்கவில்லை. மாறாக ஒரு மாதத்துக்கு முன்பு யாங்கூன் நகர வீதிகளில், மியான்மார் ராணுவத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.