`நான் யாருனு தெரியுமா... வாக்களித்த பின் நடிகர் விஜய் சேதுபதி பளீர்!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழக திரை நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் உள்ளிட்ட பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இதனிடையே நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து விஜய் சைக்கிளில் சென்றதாக அனைவரது மத்தியிலும் பேசுபொருளானது.
வீட்டுக்கு அருகிலேயே வாக்குச்சாவடி மையம் இருப்பதாலும், காரில் அப்பகுதிக்குச் சென்றால் சிரமம் ஏற்படும் என்ற காரணத்தினால் மட்டுமே அவர் சைக்கிளில் சென்றதாக அவரது மக்கள் தொடர்பாளர் விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது மனைவியுடன் கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்றும் மனிதன் தான் முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.
2019-ம் ஆண்டு கல்லூரி விழா ஒன்றில் “வாக்கு செலுத்துவது மிகவும் முக்கியம். எப்போதுமே நமது ஊருக்கு ஒரு பிரச்னை, கல்லூரிக்கு ஒரு பிரச்னை, நம் மாநிலத்துக்கு ஒரு பிரச்னை என்று அழைப்பவர்களுடன் சேருங்கள். நம் சாதிக்கு ஒரு பிரச்னை, மதத்துக்கு ஒரு பிரச்னை என்று பேசுபவர்களுடன் சேராதீர்கள் என்று பேசியது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி தனக்கு எப்போதும் அதே நிலைப்பாடுதான் என்றும், மனிதன் தான் தனக்கு முக்கியம் எனவும் தெரிவித்தார்