சபரிமலை விவகாரம் தேர்தல் பாதிக்குமா... என்ன சொல்கிறார் பினராயி விஜயன்?!
தமிழ்நாடு,கேரளா, புதுச்சேரி அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபை தொகுதிகளில் நேற்று விறுவிறுப்பாக தேர்தல் நடைபெற்றது. கேரளாவில் ஆளும் கட்சியான இடதுசாரிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி, காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி மற்றும் பாஜக கூட்டணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி அரசுக்கு இந்த தேர்தலில் சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள இடதுசாரிகள் அரசு கையாண்ட விவகாரம் இத்தேர்தலில் விமர்சனங்களை சந்தித்தது. ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை இடதுசாரிகள் அரசு புண்படுத்திவிட்டன என்ற விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, இந்த விவகாரம் தொடர்பாக இடதுசாரி அரசுகள் மீது மீது காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி குற்றஞ்சாட்டியது. அதேபோல், நாயர் சர்வீஸ் சோசைட்டி தலைவர் சுகுமாரன் என்பவர் பேசுகையில், ஐயப்பனின் கோபம் இடதுசாரிகள் அரசு மீது இருக்கும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சுகுமாரன் கருத்துக்கும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கும் கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார். தர்மடம் தொகுதியில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தனது வாக்கை செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்துப்பேசினார்.
``ஐயப்ப பக்தரான சுகுமாரன் அப்படி சொல்வதற்கு வாய்ப்பில்லை. ஐயப்பன் மற்றும் அனைத்து கடவுள்களும் மற்றும் பிற மதநம்பிக்கைகளை பின்பற்றும் மக்களின் கடவுள்களும் இந்த அரசுடன் (இடது ஜனநாயக முன்னணி) துணையாக உள்ளனர். மக்களுக்கு நன்மை செய்பவர்களுடன் தான் அனைத்து கடவுள்களும் உள்ளனர். அதை மட்டும் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.