வாக்களிக்க முடியாமல் வருத்தம்... கொரோனா தடுப்பூசியால் நடிகர் பார்த்திபனுக்கு நேர்ந்த துயரம்!
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் பார்த்திபன் வாக்களிக்காமல் இருந்தார். ஆனால் அதற்கு முந்தைய நாள் தான் அனைவரும் வாக்கு செலுத்த வலியுறுத்தும் விதமாக, ``நாளை என்பது ஒரே ஒரு நாள் அல்ல... ஐந்தாண்டு கால குத்தகை! பொத்தானில் குத்துகையில் கவனம் கொள்வோம்." என்று பதிவிட்டு இருந்தார். ஆனால் அவர் மட்டும் வாக்களிக்கவில்லை. இந்தநிலையில் தான் ஏன் வாக்களிக்கவில்லை என்பதை தற்போது விளக்கமளித்துள்ளார்.
டுவிட்டரில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள பார்த்திபன்,
``வணக்கமும் நன்றியும்... ஜனநாயகக் கடமையை சீராகச் செய்த சிறப்பானவர்களுக்கு!
வருத்தமும், இயலாமையும்.... இரண்டாம் தவனை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண் காது முகம் முழுவதும் தடித்து வீங்கிவிட்டது.டாக்டருக்குக் கூட போட்டோ எடுத்தனுப்பியே மருத்துவம் செய்துக் கொண்டேன்.மாலை வரை சற்றும் குறையவில்லை! எனவே.... தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற reactions. அதுவும் எனக்கு ஏற்கனவே allergy issues இருந்ததால் மட்டுமே trigger ஆனது.என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில்..." என்று பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில், கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார் நடிகர் பார்த்திபன். இந்த தடுப்பூசி அவரின் உடம்புக்கு ஒப்புக்கொள்ளாமல் அலர்ஜி போல் வந்து கண் காது முகம் முழுவதும் வீங்கிவிட்டது. இதனால் தான் அவர் வாக்களிக்கவில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார். இவரை போலவே உடல்நலம் சரியில்லாத காரணத்தால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.