ஸ்பீடு கியர் டிஸ்க் பிரேக்.. விஜய் ஓட்டிச் சென்ற சைக்கிளின் விலை ஸ்பெஷல் என்ன தெரியுமா?
நடிகர் விஜய் நேற்று வாக்குச் செலுத்த சைக்கிளில் வந்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தினார். வழக்கமாக, காரில் வந்து வாக்களிக்கும் நடிகர் விஜய், யாரும் எதிர்பார்க்காத வகையில் சைக்களில் வந்தார். அவர் வரும் வழியில் ஏராளாமான ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்தனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் அணிந்துகொண்டு, சைக்கிளில் வந்த நடிகர் விஜயை பலரால் அடையாளம் காண முடியவில்லை. நீலாங்கரை வாக்குசாவடிக்கு சைக்கிளில் வந்த நடிகர் விஜய் சைக்கிளை நிறுத்திவிட்டு, அங்குள்ள வாக்குச்சாவடிக்குச்சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
இவர் சைக்கிளில் வந்தது பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறிக்கும் வகையிலும், தனது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையிலும் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் அப்படி இல்லை என்று அவரது உதவியாளர் விளக்கம் கொடுத்தார். ஆனால் அதை தாண்டி விஜய் சைக்கிளில் வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதிலும் குறிப்பாக, விஜய் ஒட்டி வந்த சைக்கிளும் நேற்றில் இருந்து ட்ரெண்ட் ஆகி வருகிறது. அவரின் சைக்கிளின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ள ரசிகர்கள் காட்டிய ஆர்வமே இதற்கு காரணம். அதன்படி அந்த சைக்கிள் தொடர்பான விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளன.
பிரபல சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான மான்ட்ரா நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்பான மெட்டல் 29 மாடல் சைக்கிள் தான் நேற்று விஜய் ஒட்டி வந்தது. இதன் எடை மட்டுமே 16 கிலோ. கார்பன் பிளாக் மற்றும் நியான் ரெட் என இரட்டை வண்ணக் கலவை கொண்டு மேட் ஃபினிஷில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 24 ஸ்பீடு கியர் அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. பைக்கில் இருப்பதை போலவே மெக்கானிக்கல் டிஸ்க் பிரேக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் எக்ஸ்எம்ஆர் அலாய் ஹேண்டில்பார் மற்றும் 29 * 2.1 அங்குல அளவுடைய எம்டிபி டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மவுன்டெயின் பைக் பெர்ஃபார்மென்ஸ் வகை சைக்கிள் என்பதால் இதன் விலை ரூ.22,500 இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த 2019-ம் ஆண்டு வெளியான மெட்டல் மாடல் என்பதால் நீண்ட நாள்களாவே இந்த சைக்கிளை அவர் பயன்படுத்தி வரலாம் என்று கூறப்படுகிறது. எனினும் விஜய் ஒட்டி வந்த பின் இந்த சைக்கிளுக்கும் அதன் நிறுவனம் காசே இல்லாமல் விளம்பரமே செய்யாமல் ட்ரெண்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.