வாக்களிக்க வராத விஜயகாந்த் – ஏமாற்றத்தில் தொண்டர்கள்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த், வாக்களிக்க வராததால் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. காலை சரியாக 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணிவரையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள், உள்ளிட்ட வாக்காளர்கள் உற்சாகமாக வாக்களித்தனர். விறுவிறுப்பாக நடந்து முடிந்த இந்த வாக்குப்பதிவுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்தில் மாலை 7 மணி நிலவரப்படி 71.79 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின என்று குறிப்பிட்டார். நேற்றைய வாக்குப்பதிவின்போது கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிப்பதற்காக கடைசி ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பிபிஇ கிட் அணிந்து வாக்கு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பாட்டிருந்தன.
இந்நிலையில், விருகம்பாக்கத்தில் உள்ள காவேரி பள்ளியில், நேற்று காலை 7 மணிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் தனது வாக்கினை செலுத்தினார். அவருடன் விஜயகாந்த் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. அப்போது பேசிய அவர், “விஜயகாந்தும், தன் மகன்களும் பின்னர் வந்து வாக்களிப்பார்கள்” என்று கூறிச் சென்றுவிட்டார். பிரேமலதாவின் பேச்சில் நம்பிக்கைக்கொண்ட தொண்டர்கள் விஜயகாந்தின் வருகைக்காக காத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, பிற்பகலில் விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோர் வந்து வாக்களித்துச் சென்றனர். ஆனால் அவர்களுடனும் விஜயகாந்த் வரவில்லை. அவர்களிடம் தொண்டர்கள் கேள்வி எழுப்பியபோது, விஜயகாந்த் மாலையில் வந்து வாக்களிப்பார் என விஜய பிரபாகரன் கூறினார். இதனால் விஜயகாந்தின் வருகையை தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். விஜயகாந்த் நிச்சயம் வாக்களிக்க வாக்குச் சாவடிக்கு வருவார் என தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் இறுதியில் அவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டும் தான். இறுதிவரை எதிர்பார்த்துக்காத்துக்கொண்டிருந்த தொண்டர்கள் வாக்குப்பதிவு நிறைவடையும் 7 மணி வரையிலும் விஜயகாந்த் அங்கு வராததால் வருத்தமடைந்தனர். மேலும் தனது தலைவரை காணமுடியவில்லை என்று கூறியபடியே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.