மும்பை இந்தியன்ஸ் அணியில் இவருக்கும் கொரோனா – ஐ.பி.எல் நெருங்கும் நிலையில் தொடரும் பாதிப்பு!
ஐ.பி.எல் போட்டிக்காக ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருக்கின்றனர். எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடக்கிறது.இந்நிலையில் ஐ.பி.எல். போட்டிக்காக தயாராகி வரும் வீரர்கள் மற்றும் மைதான ஊழியர்கள், இந்திய கிரிக்கெட் வாரிய பணியாளர்களை கொரோனா தாக்கி வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அண்மையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்ஸ்மேன் நிதிஷ் ராணா, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
கொரோனாவிலிருந்து மீண்டு நிதிஷ் ராணா அணியினருடன் இணைந்து பயிற்சியை தொடங்கி விட்டார். மற்ற இரு வீரர்கள் தங்களை தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல், ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட மைதானங்களில் ஒன்றான மும்பை வான்கடே ஸ்டேடியத்தின் ஊழியர்கள் 10 பேர் ஏற்கனவே கொரோனா பாதிப்பை சந்தித்து தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த சூழலில் அந்த மைதான பணியாளர்களில் மேலும் 3 பேர் கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பிங் மற்றும் இளம் வீரர்களின் திறமையை கண்டறியும் குழுவின் ஆலோசகருமான 58 வயது கிரண்மோரே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அறிகுறி எதுவும் இல்லாத நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கும் கிரண்மோரே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.
இதனால் மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த 10 லீக் ஆட்டங்கள் நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்தது.