நடு ரோட்டில் கொச்சையாக பேசிய அமைச்சர் பெஞ்சமின் மீது புகார்
தேர்தல் விதிமுறைகளை மீறி திமுக நிர்வாகிகளை கொச்சையாக பேசிய அமைச்சர் பெஞ்சமின் மீது திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும், அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான பெஞ்சமின், 92வது வார்டு, முகப்பேரில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று சாவடியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, திமுகவைச் சேர்ந்த சிலர், அமைச்சர் பெஞ்சமினை நோக்கி, தங்களது கட்சிக் கொடியை அசைத்து, அவரை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர், பொது இடத்தில் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி திமுகவினரை வசையாடினார். மேலும், குறிப்பிட்ட சாதி பெயரை கூறி, அவர்கள் அணிவதையா அணிந்து வந்துள்ளேன் என ஆவேசமாக கத்தினார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அமைச்சர் பெஞ்சமின் தேர்தல் தேர்தல் நடத்தை விதிகளை மீறி திமுக நிர்வாகிகளை கொச்சையாக பேசியது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக தலைமை வழக்கறிஞர் நீலகண்டன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் புகார் அளித்துள்ளார். மேலும், தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும், ஆவடி சட்டமன்ற தொகுதியில் இரண்டு வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர், வலியுறுத்தியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைமை வழக்கறிஞர் நீலகண்டன், தேர்தல் அமைதியாக நடைபெற திமுகவினர் ஒத்துழைப்பு வழங்கிய நிலையில், அதிமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார்.