தொல்லை, அழுத்தம் என்ற வார்த்தைக்கு உதயநிதி விளக்கம்

தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, திமுகவில் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படுவதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் வகையில், பாஜகவில் சீனியர் தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி மரணத்துக்கு பிரதமர் மோடியின் அழுத்தம்தான் காரணம் என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் , தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார்.

இதையடுத்து, பாஜக சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகார் குறித்து விளக்கம் அளிக்க உதயநிதிக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் முன் ஆஜராகிய உதயநிதி,, தனது தமிழ்ப் பேச்சை ஆங்கிலத்தில் திரித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள “அழுத்தம்” என்கிற வார்த்தையை நான் உபயோகப்படுத்திய விதம் வேறு. ஆனால், தவறாக அர்த்தம் கற்பித்துப் புகார் அளித்துள்ளனர் என தெரிவித்துள்ளார். தான் பிரதமர் ஆக மூத்த தலைவர்கள் தலையெடுக்கா வண்ணம் அழுத்தம் கொடுத்தார் என்பதாகவே பேசினேன் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

நான் தாராபுரத்தில் என்ன பேசினேன் என்பதை ஏப்ரல் 2ஆம் தேதியன்று அன்று சிங்காநல்லூர் கூட்டத்தில் விரிவாக விளக்கம் அளித்துள்ளேன்.

ஆகவே, என்னுடைய இரண்டு வார்த்தைகளை வைத்து என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான், மறைந்த சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவர்கள் ஆற்றிய பணியை பெரிதும் மதிக்கிறேன். எனக்கு வாய்ப்பளித்தால் முழு பேச்சின் சாராம்சத்தையும் அளிக்கத் தயாராக உள்ளேன் என உதயநிதி விளக்கம் அளித்துள்ளார்.

More News >>