துபாயில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி சென்னையில் கைது
துபாயில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த கொலை குற்றவாளி துபாயிலிருந்து வந்த போது சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சோ்ந்தவா் 50 வயதான ராஜா. இவா் எலட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருந்தார். 2018 ஆம் ஆண்டில் அங்கு நடந்த கோஷ்டி மோதலில் ஒருவா் அடித்து கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் ராஜா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இது குறித்து, தொண்டி காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்ய தேடினா். ஆனால் ராஜா காவல்துறையினரிடம் சிக்காமல் தலைமறைவாகினார். இதனைத் தொடர்ந்து அவா் வெளிநாட்டிற்கும் தப்பியோடினார். இதையடுத்து ராமநாதபுரம் காவல்துறையினர் ராஜாவை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தனர். அத்துடன் அனைத்து சா்வதேச விமானநிலையங்களுக்கும் தகவல் கொடுத்தனர்.
இந்நிலையில் துபாயில் இருந்து ஃபிளை துபாய் சிறப்பு விமானம் இன்று அதிகாலை சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போட் ஆவணங்களை விமான நிலைய குடியுறிமை அதிகாரிகள் சோதனையிட்டனா்.
அதில், 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் கொலை குற்றவாளி ராஜாவும் வந்தார். அவருடைய பாஸ்போர்ட்டை கணினியில் பரிசோதித்தபோது, அவர் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, ராஜாவை குடியுரிமை அதிகாரிகள் மடக்கிப்பிடித்து, குடியுறிமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனா். அத்துடன், ராமநாதபுரம் காவல்துறையினருக்கும் இது குறித்து தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட தனிப்படை காவல்துறையினர் ராஜாவை கைது செய்ய விரைந்துள்ளனர்.