40 வருட நட்பு ஒன்றாகவே உயிரை விட்ட இந்து, முஸ்லீம் நண்பர்கள் – நட்புக்காக!
40 வருடமாக நட்பாக இருந்த இந்து முஸ்லீம் நண்பர்கள் ஒன்றாகவே உயிரிழந்த சம்பவம் அரியலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜூபிலி ரோட்டில் அல்லா கோவில் அருகே வசித்து வருபவர் மகாலிங்கம். இவர் தெருவின் அருகே உள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். மேலும் அதே பகுதியில் இவர் சிறிய டீக்கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் வீட்டின் எதிர் புறம் வசித்து வருபவர் ஜெயிலாபுதீன். அவர் ரைஸ்மில் ஒன்றை நடத்தி அதில் வரும் வருமானம் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார். மகாலிங்கமும், ஜெயிலாபுதீனும் நெருங்கிய நண்பர்ள். அவர்களின் நட்பு 40 ஆண்டுகளாக தொடர்ந்துகொண்டிருக்கிறது. இணைபிரியா நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.
மகாலிங்கம் வீட்டில் சுப காரியங்கள் நடந்தாலும் பண்டிகை காலங்களாக இருந்தாலும் ஜெயிலாபுதீன் கலந்து கொள்வார். அதுபோல் ஜெய்லாபுதீன் வீட்டில் சுபகரியங்கள் பண்டிகை காலங்களிலும் மகாலிங்கம் கலந்து கொண்டு உணவு பதார்த்தங்களை இருவரும் பரிமாறிக் கொள்வார்கள்.
அப்படி நெருக்கமாக இருந்த இரண்டு பேரும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் ஜெயங்கொண்டம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர். அருகருகே இருந்த படுக்கையில் சிகிச்சை பெற்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் பின் ஒருவராக அரை மணி நேரத்திற்குள்ளாக இறந்துள்ளனர். 40 வருடமாக இணைபிரியா நண்பர்களாக இருந்த இருவரும் ஒரே நேரத்தில் அருகே அருகே சிகிச்சை பெற்று, அரைமணி நேரம் வித்தியாசத்தில் உயிரிழந்தது அவர்களின் நட்பின் வலிமையை உணர்த்தும் வகையில் அமைந்தது.
“மதங்களை கடந்து நாங்கள் நட்பை தொடரவேண்டும். எங்களின் தாத்தா தந்தை ஆகியோரின் ஆசையும் அது தான்” என்று அவர்கள் குடும்பத்தினர் தெரிவித்தனர்.