ஒன்றாக இணைந்த எதிரெதிர் துருவங்கள்.. ரூ.1037.6 கோடி டீல் போட்ட ஏர்டெல் - ஜியோ!
தொலைத்தொடர்பு துறையில் எதிரெதிர் துருவங்கள் என்றால் அது ஏர்டெல் மட்டும் ஜியோ தான். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய தொலைத்தொடர்பு துறையில் கோலோச்சியது ஏர்டெல் மட்டும்தான். ஆனால் ஜியோ வருகைக்கு பிறகு அது அப்படியே தலைகீழாக மாறியது. 2016இல் டெலிகாம் துறையில் நுழைந்த ஜியோ அதிரடியான ஆபர்களை அள்ளி வீச பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஜியோ வசம் வந்தனர்.
இதனால் மற்ற டெலிகாம் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வந்ததாக கூறப்பட்டது. இதனால் எலியும் பூனையுமாக செயல்பட்டு வந்த ஏர்டெலும், ஜியோவும் திடீரென தற்போது வியாபார ரீதியிலான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
முகேஷ் அம்பானி தலைமையிலான ஆர்ஐஎல் நிறுவனத்தின் தொலைத் தொடர்பு துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ 800 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை பயன்படுத்துவதற்கான உரிமையைப் பெறுவதற்காக பாரதி ஏர்டெலுடன் ஒரு உறுதியான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மாற்றப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஆந்திரா (3.75 மெகா ஹெர்ட்ஸ்), டெல்லி (1.25 மெகா ஹெர்ட்ஸ்) மற்றும் மும்பை (2.50 மெகா ஹெர்ட்ஸ்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்பெக்ட்ரம் பயன்படுத்த உரிமைக்கான மொத்த மதிப்பு ரூ .1,497 கோடி. ஆனால் 1037.6 கோடி ரூபாயை ஜியோ கொடுக்கும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான ஜியோ, ஸ்பெக்ட்ரம் தொடர்பான எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.