`நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலைமை.. முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் மோடி!

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு முதல் அலையைவிட, இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை கட்டுப்படுத்தப்பட்டது. ஒரு நாள் பாதிப்பு அதிகபட்சம் 1 லட்சத்துக்குள் இருந்தது. பின்னர் 10 ஆயிரத்துக்கு கீழே கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது ஒருநாள் பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது. மூன்று நாட்களில் இரண்டு முறை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. நேற்று 1.15 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பஞ்சாப், மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்களில் முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், தடுப்பூசி போடுவது குறித்தும் பிரதமர் மோடி, அமைச்சரவை செயலர், பிரதமரின் முதன்மை செயலர், சுகாதார செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று மாலை ஆலோசனை நடத்தினார். அப்போது, ``கொரோனா முதல் அலையை கடந்துவிட்டோம், தற்போது 2வது அலையை எதிர்த்து நாம் போரிட வேண்டும். முதல் அலையை விட 2ம் அலை பரவல் வேகமாக நடந்து வருகிறது. இதனால் நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலைமை உருவாகி வருகிறது. பரவலை தடுக்க அனைத்து மாநிலங்களும் தீவிரமாக செயல்பட வேண்டும். அதற்காக முழு ஊரடங்கு போட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் இரவு நேர ஊரடங்கு போன்ற முயற்சிகள் பாராட்டத்தக்கது.

மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவது கவலை அளிக்கிறது; கொரோனா சூழலை சமாளிக்க பரிந்துரைகளை வழங்க வேண்டும்" என்று பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் பேசி இருக்கிறார் .

More News >>