கொரோனாவாவது... லாக் டவுனாவாது.. ஆட்சியாளர்களை அலறவிட்ட அம்பானி மகனின் ஒற்றை டுவீட்!
பஞ்சாப், மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொஞ்சம்கூட கொரோனா பாதிப்பு குறையாமல் இருந்து வருகிறது. இதனால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே இந்த கடும் கட்டுப்பாடுகள் காரணமாக பிரபல தொழிலதிபர் மகன் ஒருவர் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் வேறு யாரும் அல்ல. பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் மூத்த மகன் அன்மோல் அம்பானி தான் அவர். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ``கொரோனா என்பது இப்போது புதிய மத வழிபாட்டு முறை போல் ஆகிவிட்டது. கொரோனா ஒரு சர்வதேச சதி. கொரோனா காலத்தில் நடிகர், நடிகைகள் தங்களது நடிப்புத் தொழிலைத் தொடரலாம். கிரிக்கெட் வீரர்கள் இரவில் கூட தங்களது கிரிக்கெட் விளையாடலாம். அரசியல்வாதிகளும் தங்கள் பங்கிற்கு பெருவாரியான மக்கள் கூட்டத்தைக் கூட்டி பொதுக்கூட்டங்களை நடத்தலாம்.
ஆனால், தொழில் நிறுவனங்கள் பணியாளர்கள் மட்டும் தங்களது தொழில்களைச் செய்யக்கூடாதா?" என கேள்வி எழுப்பியுள்ளதோடு, ``அரசு போடும் லாக் டவுன் முயற்சியை ஒரு தீய நோக்கமுடையது. தொற்றுநோயைச் சமாளிக்க ஊரடங்கை அமல்படுத்துவதை விட, கோவிட் -19 சோதனையை அதிகப்படுத்துவதே அதிகமான நன்மையை தரும். பொருளாதார ரீதியாகவும் இது மிகவும் சாத்தியமானது இது என்று ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளனர். அதை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்" என்றும் கடுமையாக கூறி இருக்கிறார்.
அன்மோல் அம்பானிக்கு தற்போது 29 வயதாகிறது. தற்போது ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். பிரபலமான பிசினஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், இதுவரை ஊடக வெளிச்சம் தன் மீது படாத அளவுக்கு ஒதுங்கியே இருந்தவர் திடீரென பொங்கி எழுந்துள்ளது பேசுபொருளாக மாறியிருக்கிறது.