கட்டுபாடுகள் பலனளிக்கவில்லை என்றால் ஊரடங்கு தான் – தமிழக அரசு எச்சரிக்கை!
தமிழகத்தில் புதிய கட்டுபாடுகள் பலனளிக்கவில்லை என்றால், அடுத்த கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் மாஸ்க் அணிவதை உறுதிபடுத்தவும், தனிமனித இடைவெளி கட்டாயமாக்கவும், தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வர உள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
புதிய கட்டுப்பாடுகள் நாளை அமலுக்கு வர உள்ள நிலையில், தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ``தமிழகத்தில் கடந்த வாரம் முதல் சராசரி நோய்த்தொற்று 3900 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் 1.41 சதவீதம் என குறைவாகவே உள்ளது. நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் 95.55 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 34.87 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மார்ச் 16 முதல் இதுவரை விதிகளை மீறியவர்களிடம் ரூ.2.88 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கொரோனா 2வது அலையை சமாளிக்க அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ``கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பலன் கிடைக்கவில்லை எனில், இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும். கொரோனாவை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்க நேரிடும். ஒரு காலவரையறைக்குள் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஎன்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.