கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்துங்கள் – என்ன சொல்கிறார் ராகுல்காந்தி?
கரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறத்துங்கள், நாட்டில் தேவையுள்ள ஒவ்வொருவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில்,`` ஆழ்ந்த கவலையுடன் இந்தக் கடித்ததை எழுதுகிறேன். மீண்டும் நாம் கரோனா வைரஸின் பிடிக்குள் சிக்கி இருக்கிறோம்.கரோனா வைரஸ் தாக்குதலால் கடந்த ஆண்டிலிருந்து நாம் ஈடுகட்டமுடியாத இழப்புகளைச் சந்தித்து வருகிறோம்.
பல தியாகங்களைச் செய்துவிட்டோம். இந்தியாவின் தேவை அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது ஏன்? இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்.
கொரோனா தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அரசு உதவ வேண்டும். வெளிநாட்டில் செயல்பாட்டிற்கு வந்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி தரவேண்டும் தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு மோசமாக செயல்படுத்துவதன்மூலம், விஞ்ஞானிகள் மற்றும் தடுப்பூசி தயாரிப்பாளர்களின் முயற்சிகள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. தற்போதைய விகிதத்தில் தடுப்பூசி போடப்பட்டால், 75 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட பல ஆண்டுகள் ஆகும். தேவைப்படும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில், ஒரு தனிப்பட்ட நபரின் புகைப்படத்தை வெளியிடுவதை தாண்டி, அதிகபட்ச தடுப்பூசிக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்
இது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் இந்தியாவின் பொருளாதாரத்தையும் கடுமையாகக் வீழ்ச்சியடைய செய்யும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.