காதல் ராணி.. சசிகலா ரெஃபரென்ஸ்?.. `தலைவி படத்தின் இந்தி - தமிழ் டிரெய்லரில் இருக்கும் முரண்பாடுகள்!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை எடுத்துச் சொல்லும் `தலைவி' படத்தின் தமிழ் மற்றும் இந்தி டிரெய்லர்களில் வித்தியாசங்கள் சர்ச்சைகளுக்கு வித்திட்டு வருகிறது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தை ஏ.எல் விஜய் இயக்க நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்.ஜி. ஆர். வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் ஏப்ரல் 23 ஆம் தேதி படம் வெளியாகிறது. கங்கனா ரனாவத்தின் பிறந்தநாளையொட்டி தலைவி படத்தின் ட்ரைலர் மார்ச் 23 ஆம் தேதி வெளியாகி கவனம் ஈர்த்தது. அனைத்து மொழிகளிலும் ட்ரைலர் வெளியாகி இருந்தது.

இங்கு தான் சில விஷயங்கள் கவனிக்க வைக்கின்றன. இந்தி ட்ரைலரில் இடம்பெற்றிருக்கும் பல காட்சிகள் தமிழ் ட்ரைலரில் இடம்பெறவில்லை. தலைவி டிரெய்லரின் இரண்டு பதிப்புகளும் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்தாலும், படத்தின் ஓட்டத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக இங்கேயும் அங்கேயும் சில சிறிய மாற்றங்கள் உள்ளன. வழக்கமாக மொழிகளும் பார்வையாளர்களும் வித்தியாசமாக இருப்பதால் இது போன்ற மாற்றங்கள் முக்கியமாக செய்யப்படும். ஆனால் தலைவி படத்தின் இந்தி ட்ரைலரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் தமிழ் ட்ரைலரில் வேண்டுமென்ற `கட்' செய்யப்பட்டுள்ளதா என்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இந்தி ட்ரைலரில், ஒரு கட்டத்தில் உடன் இருக்கும் தலைவர் கங்கனா (ஜெயலலிதாவுக்கு) குனிந்து மரியாதை செலுத்துவது போல காட்சிகள் அமைந்துள்ளன. ஆனால் அந்தக் காட்சி தமிழ் ட்ரைலரில் இடம்பெறவில்லை. இதேபோல், அரவிந்த் சாமி, கங்கனா இடையேயான காதல் காட்சிகள் இந்தி ட்ரைலரில் ஆரம்பத்திலேயே இடம்பெற்றுள்ளதுடன், ஜெயலலிதாவை (queen of romance) காதல் ராணி என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதுவும் தமிழில் இடம்பெறவில்லை. மேலும் படத்தில் சசிகலா காட்சிகளையும் பயன்படுத்தி இருப்பது போல் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதுவும் தமிழில் இல்லை. இந்தி ட்ரைலர் 3.23 நிமிடமும், தமிழ் ட்ரைலர் 3.04 நிமிடமும் உள்ளது.

இந்த திருத்தங்களுக்குப் காரணம் ஒரு மர்மமாகவே இருக்கிறது. தமிழ் அரசியலின் நுணுக்கங்களை மனதில் வைத்திருந்து இப்படி காட்சிகளை ட்ரைலரில் காட்டவில்லையா அல்லது இந்தி பதிப்பில் மட்டும் இதை சேர்த்துள்ளார்களா என்பதும், படக்குழுவுக்கே வெளிச்சம். படக்குழு இது பற்றி பேசினால் மட்டுமே மர்மம் நீங்கும். இல்லை படம் வெளிவரும் போது மட்டுமே அதற்கான விடை கிடைக்கும்.

More News >>