அதிகரிக்கும் கொரோனா.. தலைவி படக்குழு எடுத்த முக்கிய முடிவு!
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தை ஏ.எல் விஜய் இயக்க நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்.ஜி. ஆர். வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் ஏப்ரல் 23 ஆம் தேதி படம் வெளியாகிறது. கங்கனா ரனாவத்தின் பிறந்தநாளையொட்டி தலைவி படத்தின் ட்ரைலர் மார்ச் 23 ஆம் தேதி வெளியாகி கவனம் ஈர்த்தது. அனைத்து மொழிகளிலும் ட்ரைலர் வெளியாகி இருந்தது.
அதேபோல் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்கிடையே, தற்போது தலைவி படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மிக சவாலான இந்தப்பயணத்தில் அர்ப்பணிப்பு உடன் உழைப்பை கொடுத்த படக்குழுவைச் சார்ந்த ஒவ்வொரு நபருக்கும் எங்களின் நன்றிகள். தலைவி படம் ஒரே நாளில் அனைத்து மொழிகளிலும் வெளியாக இருந்தது.
ஆனால் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் அரசின் கட்டுப்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், தலைவி படத்தின் ரீலிஸ் தேதி தள்ளிவைக்க நாங்கள் முடிவெடுத்துள்ளோம். உங்களின் அன்பு தொடர்ந்து கிடைக்கும் என நினைக்கிறோம்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.