விவிபேடை கடத்தி கள்ள ஓட்டுகள் – தமிழகத்தில் மறு வாக்குப்பதிவு?
சென்னை வேளச்சேரி தொகுதியில் 15 வாக்கு ஒப்புகை சீட்டுடன் விவிபேட் இயந்திரம் தூக்கிச் செல்லப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது, சென்னை வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட டிஏவி பள்ளி வாக்குச் சாவடியில் இருந்து இரண்டு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்ட 4 பெட்டிகளை இருவர் இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றனர். அவர்களை திமுகவினர் விரட்டிச் சென்று பிடித்தனர்.
இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பழுதான இயந்திரம் எடுத்து செல்லப்பட்டதாகவும், கள்ள ஓட்டு போடவில்லை என்றும் தேர்தல் அதிகாரிகள் அப்போது விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகியிருந்ததாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கள்ள வாக்குப்பதிவு நடக்கவில்லை என்றும், விவிபேட் இயந்திரம் என்பது நாம் யாருக்கு நாம் ஓட்டுப் போட்டோம் என்பதற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த விவிபேட் இயந்திரம் வாக்கு பதிவு மையத்தில் 50 நிமிடங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றது என்பது முற்றிலுமாக தேர்தல் விதிமீறல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பான அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் ஆணையம் அளித்துள்ளதாக கூறினார். அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிய நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.