கலவரம் ஏற்படும் சூழல் – டிஐஜி தலைமையில் போலீஸ் குவிப்பு

அரக்கோணத்தில் பட்டியல் இன இளைஞர்கள் கொலைக்கு நீதிகேட்டு 4 வது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சோகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அர்சுனன், சூர்யா உள்ளிட்டோர் கடந்த 7 ஆம் தேதி மாலை குருவராஜப்பேட்டையில் கடை ஒன்றில் அமர்ந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த பெருமாள்ராஜப்பேட்டையைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவாளர்கள் சிலர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சோகனூர் கிராம இளைஞர்களை கத்தி, இரும்பு கம்பி, பாறாங்கல்லால் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதனை அறிந்த சோகனூர் மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சிகிச்சைபலனின்றி அர்சுனன், சூர்யா உயிரிழந்தனர். மேலும், இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமணமாகி பத்து நாட்களேயான சூர்யா அடித்துக் கொலை செய்யப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லப்பட்ட இளைஞர்களுக்கு நீதி வேண்டி உறவினர் மற்றும் அச்சமூகத்தினர் இன்று 4 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, மொத்தம் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஜித், மதன், புலி என்ற சவுந்தர், நந்தகுமார், கார்த்தி, சத்யா ஆகிய 6 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள இருவரை தேடி வருகின்றனர்.

“அதிமுகவின் காவேரிப்பாக்கம் மேற்கு ஒன்றியச் செயலாளர் பழனி என்பவர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். திருட்டு மணல் ஏற்றிய வாகனங்கள் தலித் குடியிருப்பின் வழியாக வந்தபோது அங்கிருந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக-வை ஆதரிக்கும் அதிமுக வேட்பாளரை ஊருக்குள் அனுமதிக்கவில்லை. இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு பழனியின் மகன்களும், அதிமுக, பாமக சாதிவெறியர்களும் கூட்டுசேர்ந்து இந்தப் படுகொலையை நடத்தியுள்ளனர்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இதனிடையே, பட்டியலின இளைஞர்களின் கொலைக்கு நீதிகேட்டு அப்பகுதி மக்கள் சடலத்தை வாங்க மறுத்து இன்று 4 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரக்கோணம் பகுதியில் அசாதாரண சூழல் நிலவுவதால், வன்முறை ஏதேனும் நிகழ்ந்துவிடாமல் இருக்க, வேலூர் சரக டிஐஜி காமினி, ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் தலைமையில் 5 மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

More News >>