ரவுடி,கலவரக்கார உள்துறை அமைச்சரை நான் பார்த்ததில்லை – அமித்ஷா மீது மம்தா குற்றச்சாட்டு!

மேற்குவங்கத்தில் கலவரத்தை தூண்ட பார்க்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்குவங்கத்தில் சட்டசபைத்தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மேலும் மீதமுள்ள வாக்குப்பதிவுக்கான சட்டசபை தேர்தல் பிரசாரங்கள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்த பிரசாரத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். அந்தவகையில் பா.ஜனதா மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா மீது மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், இதுபோன்ற ஒரு ரவுடி, கலவரக்கார உள்துறை மந்திரியை (அமித்ஷா) என் வாழ்நாளில் பார்த்ததில்லை. அமித்ஷா, ஒரு புலியை விட மிகவும் ஆபத்தானவர். மேற்கு வங்காளத்தில் அவர் கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறார். அத்துடன் ஒழுக்கக்கேடான செயல்களை செய்வதற்கு போலீஸ்காரர்களையும் தூண்டுகிறார் என்று குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்காளத்தை பாதுகாக்கும் ஒரு நடவடிக்கைதான் தற்போதைய சட்டமன்ற தேர்தல் எனக்கூறிய மம்தா பானர்ஜி, மேற்கு வங்காளத்தை மற்றொரு குஜராத்தாக மாற்றுவதை மக்கள் தடுப்பதற்கான நடவடிக்கையே இது எனவும் தெரிவித்தார்.

அமித்ஷா மீதான மம்தா பானர்ஜியின் இந்த குற்றச்சாட்டு மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது. முன்னதாக அமித்ஷாவின் உத்தரவின்பேரில் மத்திய படைகள் இயங்குவதாக மம்தா கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக தேர்தல் கமிஷன் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்கத்தில் பாஜகவா? மம்தாவா என்ற கடும்போட்டி நிலவி வருகிறது. மேல2ம் தேதி நடைபெறும் வாக்குஎண்ணிக்கைக்கு பிறகு தான் யார் கையில் ஆட்சி என்பது தெரியவரும்.

More News >>