தியேட்டரை அடித்து நொறுக்கிய பவன் கல்யாண் ரசிகர்கள்!

தெலங்கானாவில் பவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப் திரைப்படத்தின் ஒளிபரப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் தியேட்டரை சூறையாடினர்.

இந்தியில் அமிதா பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பிங்க். இந்த திரைப்படம் பாலிவுட்டில் நல்ல வரவேற்பு பெறவே, தமிழில் இயக்குநர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் `நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் படம் ரீமேக் செய்யப்பட்டது. தமிழிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதேபோல படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவெடுக்கப்பட்டது. `வக்கீல் சாப் என்ற பெயரில் உருவான இந்த படத்தில் தெலுங்கு பவர்ஸ்டார் பவன் கல்யாண் நடித்துள்ளார். ஸ்ரீராம் வேணு இயக்கிய இந்த படத்தில் அஞ்சலி, நிவேதா தாமஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில், ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வக்கீல் சாப் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது.

இதனிடையே தெலங்கானாவின் ஜகுலம்பா கத்வால் பகுதியிலுள்ள திரையரங்கு ஒன்றில் தொழில்நுட்ப காரணமாக வக்கீல் சாப் திரைப்படம் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பவன் கல்யாண் ரசிகர்கள் திரையரங்கின் கதவு உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர். ரசிகர்களின் இந்த அடாவடித்தனத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பவன் கல்யாண் ரசிகர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது முதன்முறையல்ல. முன்னதாக வக்கீல் சாப் திரைப்படத்தின் டிரைலர் திரையரங்கில் வெளியானபோதும் பவன் கல்யாண் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

More News >>