சிஎஸ்கே வெர்ஸஸ் டெல்லி - இன்றைய ஆட்டம் எப்படி இருக்கும்?
ஐபிஎல் போட்டியின் இரண்டாவது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சிஎஸ்கேவுடன் டெல்லி அணி மோதுகிறது. கொரோனா தொற்றால் ஆறு மைதானங்களில் மட்டுமே போட்டி நடைபெறுவதால் சிஎஸ்கே அணிக்கு சேப்பாக்கத்தில் எந்த போட்டியும் இல்லாதது ரசிகர்களுக்கு சற்று வருத்தம் தான்.
இரு அணிகளும் நேருக்குநேர் மோதியதை வைத்து பார்த்தால் சிஎஸ்கே கையே ஓங்கியிருக்கிறது. இரண்டு அணிகளும் 25 முறை மோதியதில் 8 முறை சிஎஸ்கேவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. ஆனால் கடந்த சீசனில் டெல்லிக்கு எதிரான 2 போட்டியிலும் சிஎஸ்கே-வுக்கு பெரும் அடியே விழுந்தது. சிஎஸ்கேவில் வாட்சன், ஹர்பஜன் சிங், கேதர் ஜாதவ் வெளியேறிவிட்டதால், இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.
கடந்த சீசனில் ருத்துராஜ் கெய்க்வாட் கடைசியாக நடைபெற்ற 3 ஆட்டங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதங்கள் விளாசினார். அதனால் அவர் தொடக்க வீரர் இடத்தை நிரப்பிவிடுவார். அவருடன் டு பிளிஸ்சிஸ் அல்லது உத்தப்பா யார் களம் இறங்குவார்கள் என்பது தான் கேள்வி. சிறப்பான ஓபனிங் காம்பினேசனோடு முதல் போட்டியில் களம் இறங்க டோனி விரும்புவார். சின்ன தல ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்பியது மிடில் ஆர்டருக்கு மிகப்பெரிய பலம். 7 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட மொயீன் அலி, 9.25 கோடி ரூபாய்க்கு எடுத்த கிருஷ்ணப்பா கவுதமை தல டோனி எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பது இரவு தெரிந்துவிடும்.
பேட்டிங்கில் ருத்து ராஜ், உத்தப்பா, அம்பதி ராயுடு, ரெய்னா, எம்எஸ் டோனி, ஜடேஜா ஆகியோர் வலுவாக உள்ளனர். ஜடேஜா, கிருஷ்ணப்பா கவுதம், மொயீன் அலி, இம்ரான் தஹிர் சாய் கிஷோர், மிட்செல் சான்ட்னர் என சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் பஞ்சமில்லை. தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், பிராவோ, சாம் கர்ரன் ஆகியோர் உள்ளனர். இந்த நான்கு பேரால் பேட்டிங்கும் செய்ய முடியும். இது சிஎஸ்கே-வுக்கு கூடுதல் பலம்.
எப்படியிருந்தாலும் வெற்றியோடு தொடரை தொடங்க வேண்டும் என சிஎஸ்கே களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை.போட்டி நடைபெறும் மும்பை வான்கடே மைதானம் சேஸிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும். இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசும்.முதலில் பேட்டிங் செய்யும் அணி 190 ரன்களுக்கு மேல் குவித்தால் அந்த அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.