“லவ் ஜிகாத்” சர்ச்சை – மருத்துவக் கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு
கேரளா மருத்துவக்கல்லூரி மாணவியும், மாணவரும் ஆடிய நடனம் வைரலாகும் நிலையில் “லவ் ஜிகாத்” எனக் கூறிய வழக்கறிஞருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது
கடந்த மார்ச் 23 ஆம் தேதி கேரளா மாநிலம் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர் நவீன் கே ரசாக்கும், மூன்றாம் ஆண்டு மாணவி ஜானகி ஓம்குமாரும் போனி எம் இசைக்குழுவின் பிரபல பாப் பாடலான ரஸ்புடின் பாடலுக்குக் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டனர்.
நவீன் கே ரசாக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த நடன வீடியோவுக்கு இதுவரை 6 லட்சம் பார்வையாளர்களுக்குமேல் கடந்துள்ளது.
இந்நிலையில், வழக்கறிஞர் கிருஷ்ணராஜ் என்பவர், ஜானகி ஓம்குமார் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவருடன் நடனம் ஆடும் நவீன் கே ரசாக் இஸ்லாமியர் என்பதாலும் “ஜானகியின் பெற்றோர் கவனமாக இருக்கவேண்டும். இதில் ஏதோ தவறு இருக்கிறது. நவீன் கே ரசாக் ஒரு இஸ்லாமியர். ஜானகி தந்தைக்காகவும் அவரின் மனைவிக்காகவும் வேண்டிக்கொள்கிறேன்” என்று தனது ஃபேஸ்புக்கில் அவர்கள் நடனம் ஆடும் வீடியோவை பகிர்ந்து கருத்து தெரிவித்திருந்தார்.
பாஜகவினரின் இந்த சர்ச்சைக் கருத்தைக் கண்டிக்கும் விதமாக திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பலரும் #ResistHate ஹேஷ்டேக்கில் இதே பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெறுப்பது உங்கள் திட்டம் எனில், அதை எதிர்ப்பது எங்கள் முடிவு' என்று (If the intention is hate, then the decision is to resist) என்று ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து காங்கிரஸைச் சேர்ந்த சசி தரூர், “வெவ்வேறு மதங்களின் காரணமாக இந்துத்துவா விஷத்தை ஊற்றுவதற்குப் பதில் கைத்தட்டலுக்கும் ஊக்கத்திற்கும் தகுதியானவர்கள் இந்த மாணவர்கள். இளமையான இந்தியாவின் சிறந்த இளைஞர்களாகவும் தோழர்களாகவும் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் சிறந்த மருத்துவர்களாக வெளிப்படுவார்கள்” என்று இந்த வைரல் வீடியோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.