காலையில் காத்திருந்த அதிர்ச்சி – சென்னை போரூரில் பரபரப்பு
சென்னை போரூர் அருகே காற்று வரவில்லை என கதவை திறந்து வைத்து தூங்கிவர் வீட்டில் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போரூரை அடுத்த ஐய்யப்பன்தாங்கல், அன்னை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். கொத்தனார் வேலை செய்து வரும் இவர், நேற்று இரவு தூங்கும் போது, கடும் வெக்கை காரமாக, வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு குடும்பத்தினருடன் தூங்கியுள்ளார்.
வழக்கம் போல், இன்று காலை மணிகண்டன் எழுந்து பார்த்தபோது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டிருந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே பீரோவை அருகில் சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோவுக்குள் வைத்திருந்த 7 சவரன் தங்க நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம் திருடுபோயுள்ளது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார். வீட்டின் அருகில் உள்ள இடங்களின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். காற்றுக்காக கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியவர் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.