ஈரான் அணு ஆலையில் இஸ்ரேல் தாக்குதல் என குற்றச்சாட்டு
ஈரான் அணு ஆலையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக அந்நாடு குற்றம்சாட்டியுள்ளது.
ஈரானின் இஸ்பகான் மாகாணத்தில் நாதன்ஸ் நகரில் யுரேனியம் செறிவூட்டும் ஆலையை கட்டி வருகிறது. இதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதனிடையே யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் யுரேனியத்தை விரைவாக செறிவூட்டும் புதிய மேம்பட்ட I.R-6 ரக மைய விலக்குகளை பயன்படுத்த தொடங்கியுள்ளதாக ஈரான் கடந்த சனிக்கிழமை அறிவித்தது.
இந்நிலையில் யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தால் ஆலையில் மின் வினியோகம் தடைபட்டது. நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏதேனும் நிகழவில்லை.
ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவர் அலி அக்பர் சலேஹி இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இந்த சம்பவத்தை நாசவேலை மற்றும் அணு பயங்கரவாதம் என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறும் போது இந்த இழிவான நடவடிக்கையை ஈரான் கண்டிக்கிறது என்றும், இந்த அணு பயங்கரவாதத்தை சமாளிக்க சர்வதேச சமூகம் மற்றும் சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஆகியவற்றின் அவசியத்தை ஈரான் வலியுறுத்துகிறது என கேட்டுக்கொண்டுள்ளார். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் உரிமை ஈரானுக்கு உள்ளது என்றும், எவ்வாறாயினும், இஸ்ரேலிய பொது ஊடகங்கள் உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி, இது இஸ்ரேலிய இணைய தாக்குதலின் விளைவு என்று அவர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.