கொலஸ்ட்ராலை குறைக்கும்... முடக்குவாத வலிகளை போக்கும்...

இயற்கையின் மிக அற்புதமான படைப்புகளுள் ஒன்று வெள்ளரி. வெள்ளரி, காய்கறி வகையைச் சேர்ந்தது என்று நீங்கள் நினைத்திருந்தால், அது பூவிலிருந்து உருவாவதையும் செடியின் விதைகளை தன்னகத்தே கொண்டிருப்பதையும் கருத்தில் கொள்ளுங்கள். ஆகவே, வெள்ளரியை பழம் என்று கொள்வதே பொருத்தமானதாகும்.

செரிமானம்

வெள்ளரியில் வைட்டமின்கள், உணவு வகை நார்ச்சத்து, நீர் ஆகியவை நிறைந்துள்ளது. ஆகவே, செரிமானத்திற்கு உதவுகிறது. தினமும் ஒரு வெள்ளரியை சாப்பிட்டால், மலம் கழிப்பதிலுள்ள பல பிரச்னைகளை அது தீர்க்கும். மலச்சிக்கலை போக்கக்கூடிய தன்மை வெள்ளரிக்கு உண்டு.

எலும்புக்கு வலிமை

வெள்ளரியில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் (சுண்ணாம்புச் சத்து)ஆகியவை உள்ளன. இவை எலும்புக்கு பலன் அளிக்கக்கூடியவை. வைட்டமின் கே சத்துக்கு எலும்பு முறிவு அபாயத்தை தடுக்கும் ஆற்றல் உண்டு. மேலும், நாம் சாப்பிடும் உணவிலிருந்து சுண்ணாம்புச் சத்தை உடல் உறிஞ்சிக்கொள்ளவும் வைட்டமின் கே உதவுகிறது. முடக்குவாதத்தினால் ஏற்படும் வலி மற்றும் வேதனையிலிருந்து வெள்ளரி நிவாரணம் அளிக்கிறது என்ற நம்பிக்கையும் உள்ளது. அழற்சியின் காரணமாக ஏற்படும் வலியையும் இது குறைக்கிறது. முதுமையின் வாசலில் இருப்போர் வெள்ளரியை சாப்பிடுவது அவசியம்.

இதய ஆரோக்கியம்

வெள்ளரியில் மெக்னீசியம், பொட்டாசியம் ஆகிய தாதுக்களும் வைட்டமின் கே சத்தும் உள்ளன. இவை மூன்றுமே இதய ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவையாகும். மெக்னீசியமும் பொட்டாசியமும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. தொடர்ந்து வெள்ளரியை சாப்பிட்டு வந்தால் குறை அடர்த்தி லிப்போபுரோட்டீன் (எல்டிஎல்) எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு உடலில் குறைகிறது. கரையக்கூடிய நார்ச்சத்தான பெக்டின் வெள்ளரியில் உள்ளது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவும் குறையும். வைட்டமின் கே இரத்தத்தில் கால்சியத்தின் (சுண்ணாம்புச் சத்து) அளவை சீராக பராமரிக்கிறது. இரத்த உறைதலுக்கும் இது உதவுகிறது. ஆகவே, வெள்ளரி சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் வெள்ளரியில் அதிகமாக உள்ளன. இவை இரத்த ஓட்டத்தை சீராக்குகின்றன. உடலிலுள்ள திசுக்களை மறு உருவாக்கம் செய்யவும் உதவுகின்றன. உடலுக்குத் தீங்கு செய்யும் நிலையற்ற அணுக்களுக்கு (ஃப்ரீ ராடிகல்ஸ்)எதிராக செயல்படுகின்றன. ஃப்ளவனாய்டுகள் மற்றும் டானின்கள் ஆகியவை ஃப்ரீ ராடிகல்ஸ் சேகரமாவதை தடுக்கின்றன.

நோய் எதிர்ப்பாற்றலும் கூந்தலும்

நம் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் நன்றாக இருந்தால் கூந்தலும் வளமாக காணப்படும். வெள்ளரியில் ஏ, பி, சி மற்றும் கே ஆகிய வைட்டமின்களும், மெக்னீசியம், காப்பர் (செம்பு), பொட்டாசியம் ஆகிய தாதுக்களும் உள்ளன. இவை, நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கின்றன. நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிப்பதால் கூந்தல், நகங்கள் மற்றும் சருமம் ஆகியவை ஆரோக்கியமாக காணப்படும்.

நீர்ச்சத்து

நம் உடலின் செயல்பாட்டுக்கு நீர்ச்சத்து மிகவும் அவசியம். ஒரு நாளைக்கு 8 முதல் 10 தம்ளர்கள் நீர் அல்லது மற்ற பானங்கள் அருந்தவேண்டும். தனியாக நீர் அருந்துவதோடு நீர்ச்சத்தினை பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டும் உடலில் சேர்த்துக்கொள்ளலாம். பழங்கள், காய்கறி சாப்பிடும்போது முறையான ஊட்டச்சத்தும் உடலுக்குக் கிடைக்கிறது. வெள்ளரி 90 சதவீதம் நீரால் ஆனது. வெள்ளரி உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்தை அளிப்பதோடு உடலை சுத்தமும் செய்கிறது. வெள்ளரியால் உடலிலுள்ள நச்சுப்பொருள்கள் அகற்றப்படுகின்றன. சிலர் தண்ணீர் அருந்த மறப்பதுண்டு. அப்படிப்பட்டவர்கள் தினமும் 1 வெள்ளரி சாப்பிடுவது நல்லது.

உடல் எடை

இயற்கையான முறையில் உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு வெள்ளரி மிகவும் ஏற்றது. வெள்ளரியில் அதிக நார்ச்சத்தும் நீரும் இருப்பதோடு, அது குறைந்த கலோரி கொண்டதுமாகும். உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பை குறைப்பதற்கு வெள்ளரி உதவுகிறது. புரதம், கார்போஹைடிரேடு, வைட்டமின் கே, மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை அடங்கியுள்ள வெள்ளரியில் கொழுப்புச் சத்து அறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வெள்ளரியை சாப்பிட்டால் ஒரே வாரத்தில் 5 கிலோ வரைக்கும் எடை குறையும்.

துர்நாற்றம்

வெள்ளரி கொடியில் தொங்கும்போது தீங்கு விளைக்கும் பொருள்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு பைட்டோகெமிக்கல்கள் என்னும் வேதிப்பொருள்களை கொண்டிருக்கிறது. இது வாயிலுள்ள தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. ஒரு துண்டு வெள்ளரியை வாயின் மேல் அண்ணத்தில் 30 விநாடிகள் அதக்கிக்கொண்டால் பாக்டீரியாக்களை கொல்லும்.

வாயில் அமிலத்தன்மையை ஒழுங்குபடுத்தும் தன்மை வெள்ளரிக்கு உண்டு. தொடர்ந்து வெள்ளரியை கடித்து சாப்பிடுவதால் ஈறு மற்றும் பல் தொடர்பான நோய்கள், பாதிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. பற்களில் படியும் காரைகளும் அகற்றப்படுகிறது.

ஹார்மோன்கள்

நம் உடலிலுள்ள ஹார்மோன்களை சமநிலைப்படுத்தக்கூடிய முக்கியமான ஊட்டச்சத்து பாஸ்பரஸ் ஆகும். தினமும் ஒருவர் எடுக்கவேண்டிய பாஸ்பரஸின் அளவில் 4 சதவீதம் வெள்ளரியில் உள்ளது. தினமும் வெள்ளரியை சாப்பிட்டால் ஹார்மோன்கள் சமநிலைப்படும்.

மன அழுத்தம்

மனக்கலக்கம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கக்கூடிய வைட்டமின்கள் பி1, பி5 மற்றும் பி7 ஆகியவை வெள்ளரியில் காணப்படுகின்றன. ஆகவே, வெள்ளரி சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும்.

More News >>