அன்புமணியை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது – திருமாவளவன் பேச்சு!
``உழைக்கும் சமூகத்தையே இழிபடுத்துகிற ஓர் உளவியலை அன்புமணி வெளிப்படுத்தி இருக்கிறார்; அவரின் நிலையை எண்ணி பரிதாபப்படுகிறேன்" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அரக்கோணத்தில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக கருத்து தெரிவித்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் பேசுகையில், “அரக்கோணம் கொலைகளுக்குப் பின்னால் சாதிப் பிரச்னை இல்லை. திருமாவளவன்தான் இதனை சாதிப் பிரச்னையாக மாற்றுகிறார். படித்த இளைஞர்கள் யாரும் திருமாவளவனுடன் நிற்பதில்லை” என்றார். இதனை கண்டித்து சமூக வலைதளங்களில் பெரும் புரட்சியே வெடித்து. இதன் காரணமாக ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் #standwiththiruma , #myleaderthiruma , #isupportthiruma போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகின.
அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் தங்களின் கல்வித்தகுதியை பதிவு செய்து, 'நான் திருமாவளவனுக்கு ஆதரவாக நிற்கிறேன்' என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “நாங்கள் திருமாவுடன் நிற்கிறோம் என சமூக வலைதளங்களில் பேராதரவு நல்கிய கல்வியாற் சிறந்த பெருமக்கள் யாவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி.
மனிதநேய உணர்வையும் சமத்துவ பார்வையையும் வழங்குவதே சிறந்தகல்வி. படித்தவர்கள், படிக்காதவர்கள் என மக்களை பாகுபடுத்தி உயர்வு தாழ்வு காண்பது சனாதனப்புத்தியின் விளைச்சலாகும்” என்று பதிவிட்டுள்ளார்.மேலும், இது தொடர்பாக காணொலி மூலமாக பேசியவர், “திருமாவளவனை படித்த இளைஞர்கள் நம்புவதில்லை என்று அன்புமணி ராமதாஸ் என் மீது தனிநபர்
விமர்சனம் வைத்துள்ளார். அவர் என்னைக் கொச்சைப்படுவதாக எண்ணிக்கொண்டு படிப்பதற்கு வாய்ப்பில்லாத இளைஞர்களை கொச்சைப்படுத்துகிறார். படித்தவர்கள் படிக்காதவர்களை விட மேலானவர்கள் என்பதைப் போன்று உளவியலின் அடிப்படையில் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
படித்தவர்கள் ஆதரித்தால்தான் அவர்கள் உயர்ந்தவர்கள். படிக்காதவர்கள் ஆதரித்தால் அவர்கள் தாழ்ந்தவர்கள் என்கிற கருத்து அதிலே தொனிக்கிறது. அவரின் நிலையை எண்ணி பரிதாபப்படுகிறேன்" என்றும் பேசியிருக்கிறார்.