ஒருபுறம் மகிழ்ச்சி.. மறுபுறம் வருத்தம்.. இது பவன் கல்யாணின் சங்கடம்!
ஜனசேனா கட்சியின் நிறுவனர் மற்றும் டோலிவுட் திரைப்பட நட்சத்திரம் பவன் கல்யாண். இவரின் நடிப்பில் சில நாட்களுக்கு முன் "பிங்க்" படத்தின் ரீமேக்கான 'வக்கீல் சாப்' ரிலீசானது. படம் ரசிகர்களை வெகுவாக கவர, வசூலை அள்ளி வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படத்தின் ரெக்கார்டுகளையும் முறியடித்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு பவனின் தரிசனம் கிடைத்தத்தில் ரசிகர்கள் பூரிப்பில் இருந்துவருகின்றனர். இதில் பவன் மகிழ்ச்சி அடைந்தாலும், மற்றொரு புறம் வருத்தத்தில் இருக்கிறார்.
காரணம் பவனின் உதவியாளர்கள், அவர் நடத்தி வரும் ஜனசேனா கட்சியின் தனிப்பட்ட அணியின் பல உறுப்பினர்களும், பாதுகாப்பு குழு என பலருக்கும் கொரோனா வந்துள்ளது. இதனால் தற்போது பவன் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். அவரது குடும்பத்தில் பலரும் கோவிட் பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பவன் கல்யாண் சுய தனிமைப்படுத்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் அதன்படி செய்துள்ளார்.
எனினும் தனிமைப்படுத்தலின் போது தனது வழக்கமான கட்சி நடவடிக்கைகளைத் தொடருவார், மேலும் வீடியோ கான்பரன்சிங் மூலம் கட்சி சகாக்களுடன் உரையாடுவார் என்று ஜனசேனா கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. காரணம், பாஜகவின் கூட்டணியில் இருக்கும் பவன் கல்யாண் ஏப்ரல் 17 ம் தேதி நடக்க இருக்கும் திருப்பதி மக்களவைத் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் ரத்னமாலாவுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். ஏப்ரல் 12 ம் தேதி பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நதாவுடன் திருப்பதியில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பவன் கல்யாண் பங்கேற்க திட்டமிடப்பட்டது. இந்தநிலையில் தான் தனிமைப்படுத்தலில் தற்போது உள்ளார்.