தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்த வண்ணமே உள்ளது. இவற்றை தடுக்கும் வகையில் பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் இந்தியா முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றனர். கடந்த 10 ஆம் தேதி துவங்கிய இம்முகாம் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 45 வயதிற்கு மேற்பட்டோர் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டனர். மும்பை, பூனே, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், கொரோனா பரவலை தடுக்க தெரியாத அரசுகள், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கவனத்தை திசைதிருப்புவதாக குற்றம்சாட்டினார். அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போட செல்பவர்களை கடந்த 3 நாட்களாக ஏதாவது ஒரு காரணம் சொல்லி மருத்துவமனை ஊழியர்கள் திரும்பி அனுப்புவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

நேற்று தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், மேலும் ஒரு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

More News >>