நடிகர் செந்தில் குடும்பத்துடன் மருத்துவமனையில் அனுமதி

கொரோனா தொற்று காரணமாக நடிகர் செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நடிகை குஷ்பு, நடிகர் கார்த்திக் உள்ளிட்ட திரைத்துறை நட்சத்திரங்கள் அரசியல் பிரபலங்கள் என பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் மூத்த நகைச்சுவை நடிகரான செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடிப்பை தொடர்ந்து, அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. கட்சிகளில் இருந்த அவர், அண்மையில் பாஜக-வில் இணைந்தார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்காக நடிகர் செந்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததைத் தொடர்ந்து கொரோனா தொற்று பரிசோதனை எடுத்துக்கொண்டார்.

பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் அவர்களும் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்வி மற்றும் மகன், மருமகள் ஆகியோர் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் செந்தில் குடும்பத்தினர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

More News >>