10 நபர்களுக்கு மேல் அனுமதியில்லை – கோவில் திருமணங்களுக்கு புதிய கட்டுபாடு!
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கோவில்களில் திருமணம் நடத்த புதிய கட்டுப்பாடுகளை பிறப்பித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலை தொடங்கி நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில மாதங்களாக ஓரளவு கட்டுபாட்டில் இருந்த கொரோனா தொற்று பாதிப்பானது, மீண்டும் ஏகிற தொடங்கியிருக்கிறது. இந்த கொரோனா பெருந்தோற்றை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக அண்மையில் இரவு 11 மணி வரை 50% ஊழியர்களுடன் கடைகள் நடத்தப்பட வேண்டும். மால்கள், வழிபாட்டு தலங்களுக்கு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனொ தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் இரவு நேர ஊரடங்குக்கு வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கோயில்களில் திருமணம் நடத்த புதிய கட்டுபாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, கோயில்களில் நடைபெறும் திருமணத்தில் 10 நபர்களுக்கு மேல் அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோயில் மண்டபங்களில் திருமணம் செய்யும் பட்சத்தில், 50 நபர்களுக்கு மேல் அந்த திருமணத்தில் அனுமதி கிடையாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே திருமணம் நடைபெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். திருக்கோவில் அத்தியாவசிய பூஜைகளில் அந்தந்த கோவில் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்றும் இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை பிரதமர் மோடி கொரோனா தொற்று பாதிப்புகள் குறித்து அந்தந்த மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனைக்கு பிறகு புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.