பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை கொண்டு மெத்தை தயாரித்த நிறுவனம்!
கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முககவசங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படி பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை உடனே பாதுகாப்பான முறையில் மற்றவர்களுக்கு கேடு விளைவிக்காத வகையில் அப்புறப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில், பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை சேகரித்துள்ளது ஒரு நிறுவனம். மேலும் சேகரித்த அந்த முக கவசங்களை பயன்படுத்தி மெத்தை தயாரித்து வந்துள்ளனர். இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பணியாளர்களை கைது செய்துள்ளனர். இந்த செய்தி அப்பகுதியில் வசிக்கும் அக்கம் பக்கத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மெத்தை தயாரிப்பு நிறுவன வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த முக கவசங்களை போலீசார் கைப்பற்றி தீயிட்டு அழித்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு போராடி வரும் நிலையில், நோய் பரப்பும் கிருமிகள் கொண்ட முக கவசங்களை மெத்தை தயாரிப்புக்கு பயன்படுத்திய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குசம்பா கிராமத்தில் இந்த மெத்தை தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. பருத்தி மற்றும் பிற மூலப்பொருட்களை பயன்படுத்தி மெத்தை தயாரிப்பதற்கு பதிலாக, பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை அடைத்து மெத்தை தயாரித்துள்ளனர். இது தொடர்பாக மெத்தை தயாரிப்பு நிறுவன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. இந்த தொழிலில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.
கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் இப்படியான விநோதங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன.